Published : 22 Aug 2023 02:03 PM
Last Updated : 22 Aug 2023 02:03 PM
மும்பை: வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தாதா பூஸ், "இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு மக்கள் முக்கியமான காய்கறிகளை சாப்பிடவில்லையென்றால் எதுவும் ஆகிவிடாது" என்று தெரிவித்துள்ளார்.
வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைகளில் விநியோகத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆகஸ்ட் 19-ம் தேதி வெங்காயத்துக்கான ஏற்றுமதியை 40 சதவீதம் உயர்த்தியது. வரும் டிசம்பர் 31 வரை வரி உயர்வு அமலில் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சர் தாதா தபூஸ் கூறும்போது, "நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை பயன்படுத்தும்போது, சில்லறை விலையை விட ரூ.10 அல்லது ரூ.20 அதிக விலைக்கு பொருட்களை நீங்கள் வாங்கலாம். வெங்காயம் வாங்க முடியாதவர்கள் இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் எதுவும் மாறிவிடாது.
வெங்காயம் சிலசமயம் குவிண்டால் ரூ.200-க்கும், சிலசமயம் குவிண்டால் ரூ.2,000-க்கும் விற்கப்படுகிறது. இதனால் ஒரு விவாதம் நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம். வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி உயர்வு முடிவு என்பது ஓர் ஒருங்கிணைந்த முடிவுக்கு பின்னர் எடுத்திருக்கலாம்" என்றார்.
முன்னதாக, திங்கள்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான லாசால்கான் உள்ளிட்ட நாசிக்கில் உள்ள அனைத்து விவசாய உற்பத்தி சந்தை குழு வியாபாரிகள் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே, மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப்பெறும் வரை வெங்காய ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் என்று நாசிக் மாவட்ட வெங்காய விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்றுமதி விலை உயர்வை கண்டித்து பல விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT