Published : 21 Aug 2023 04:04 AM
Last Updated : 21 Aug 2023 04:04 AM

பருத்தி கொள்முதலில் எச்சரிக்கை தேவை: நூற்பாலைகளுக்கு ‘சைமா’ அறிவுறுத்தல்

கோவை: நடப்பாண்டு பருத்தி சீசனுக்கான உற்பத்தி குறித்து இந்திய பருத்தி சங்கத்தின்(சிஏஐ) வெளியிட்டுள்ள மதிப்பீடுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சைமா, பருத்தி கொள்முதலில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நூற்பாலைகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பருத்தியை அடிப்படையாக கொண்ட இந்திய ஜவுளித் தொழில், பருத்தி விலையில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஜவுளி ஆலோசனைக் குழுவை உருவாக்கி, பருத்தி விலையை நிலைப்படுத்தவும், உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பருத்தி இறக்குமதி மீது நடைமுறையில் உள்ள 11 சதவீத வரி உள்நாட்டு பருத்தி வர்த்தகத்தில் சம விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.

பருத்தி கையிருப்பு மற்றும் வரத்தின் அளவை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் பருத்தி சந்தையில் அடிக்கடி பீதி உருவாக்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டு சீசனுக்கு பருத்தி பயிர் உற்பத்தி, பருத்தி வரத்து மற்றும் தொடக்க இருப்பு பற்றி இந்திய பருத்தி சங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விவரங்களுக்கு ‘சைமா’ சார்பில் மறுப்பு தெரிவித்துக்கொள்கிறோம்.

பருத்தியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், நூல் விலையில் எதிரொலிக்கும். இதனால் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஒப்புக்கொண்ட ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு இழப்பை சந்திக்க நேரிடும். பயிரின் அளவைக் குறைத்து மதிப்பிடுவது, பருத்திச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சில நாட்களிலேயே பருத்தியின் விலை கேண்டி ஒன்றுக்கு ரூ.3,000 வரை அதிகரித்துள்ளது. 2022-23 பருவத்தில் இந்திய பருத்தி கழகத்தின் மதிப்பீட்டின்படி பருத்தி வரத்து 318 லட்சம் பேல்களை கடந்திருக்கும் நிலையில் இந்திய பருத்தி சங்கம் பயிர் உற்பத்தி 311.18 லட்சம் பேல்களாகவும், வரத்து 296.8 லட்சம் பேல்களாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜவுளித் தொழில் பங்குதாரர்கள் இந்திய பருத்தி சங்கத்தின் மதிப்பீட்டை புறக்கணித்து, பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக் குழுவின் மதிப்பீட்டை நம்பலாம். அக்குழு பருத்தி இருப்பு 39.48 லட்சம் பேல்கள், பயிர் உற்பத்தி 343.47 லட்சம் பேல்கள், பருத்தி நுகர்வு 295 லட்சம் பேல்கள், ஏற்றுமதி 30 லட்சம் பேல்கள், இறுதி பருத்தி இருப்பு 51.95 லட்சம் பேல்கள் என மதிப்பிட்டுள்ளது.

பருத்தி விலையில் ஸ்திரத் தன்மையைக் கொண்டு வருவதற்கும், மூலப்பொருளை பொருத்த வரையில் உலகளாவிய போட்டித்தன்மையைப் பெறுவதற்கும், பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவது மிகவும் அவசியம்.

பருத்தி விநியோக நிலை சாதகமாக உள்ளதாலும், புதிய சீசனுக்கான பருத்தி ஏற்கெனவே வடக்கு பிராந்தியத்தில் இருந்து சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதாலும், நூற்பாலைகள் பருத்தி வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x