Published : 20 Aug 2023 05:45 AM
Last Updated : 20 Aug 2023 05:45 AM

இந்தியாவில் ரூ. 1.13 கோடி ஆரம்ப விலையில் ஆடி மின்சார சொகுசு கார்கள் அறிமுகம் - ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்

ஆடி கார் நிறுவனம் சார்பில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற விழாவில், 2 புதிய மின்சார சொகுசு கார்களை ஆடி நிறுவனத்தின் இந்திய தலைவர் பல்பீர் சிங் தில்லான் அறிமுகம் செய்து வைத்தார்.

மும்பை: ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் புதிதாக ஆடி க்யூ-8 இ-ட்ரான் மற்றும் ஆடி க்யூ-8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகிய இரு கார்களை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியது.

உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் ஆடி க்யூ-8 50 இ-ட்ரான், ஆடி க்யூ8 55 இ-ட்ரான், ஆடி க்யூ-8 ஸ்போர்ட்பேக் 50 இ-ட்ரான் மற்றும் ஆடி க்யூ-8 ஸ்போர்ட்பேக் 55 இ-ட்ரான் என 4 வகைகளில் இந்தகார்கள் இந்திய சந்தைக்கு வந்துள்ளன.

114 கிலோ வோல்ட் திறன் பேட்டரி கொண்ட 55 இ-ட்ரான் கார்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிமீ வரை பயணிக்க முடியும். அதேபோல 50 இ-ட்ரான் வகை கார்கள் ஒரே சார்ஜில் 505 கிமீ வரை பயணிக்கலாம்.

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தபுதிய ரக மின்சார சொகுசு கார்களை அறிமுகம் செய்து வைத்த ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த, சப்தம் எழுப்பாத மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். 9 புதிய வண்ணங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புத்துணர்ச்சியூட்டும் ஸ்டைலிங்குடன் இவை உள்ளன. 8 ஏர்-பேக்குகள், அவசர கால பாதுகாப்பு, நேரடி டயர் அழுத்த கண்காணிப்பு, அழகான டிசைன், தரமான பொறியியல் மேம்பாடு ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

மேலும் 26 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் திறன் கொண்டபெரிய ரக லித்தியம் அயன் பேட்டரிகள், மொபைல் போனுக்கான வயர்லெஸ் சார்ஜிங், சிறந்த இன்-கிளாஸ் கிரவுண்ட் கிளியரன்ஸ், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் ஆகிய வசதிகளும் உள்ளன. ஆல்-வீல் டிரைவ், 3-டிப்ரீமியம் ஒலி அமைப்பு, பார்க் அசிஸ்டுடன் கூடிய 360 டிகிரி கேமராக்கள், எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய சிறப்பம்சங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுத் தரும்.அத்துடன் 8 வருடம் அல்லது ஒருலட்சத்து 60 ஆயிரம் கிமீ வரையிலான பேட்டரி உத்தரவாதம், ஆண்டு இறுதி வரை இலவச சார்ஜிங் இணைப்பு, அதிக குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார்கள், எல்இடி விளக்குகள், நாடு முழுவதும் ஆயிரம் சார்ஜிங் பாயிண்ட் ஆப்ரேட்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் எங்களது கார் விற்பனைக்கு புது உத்வேகம் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x