Published : 01 Dec 2017 10:27 AM
Last Updated : 01 Dec 2017 10:27 AM

வணிக நூலகம்: வலிமையான செயல்களும், வரம்பற்ற வெற்றிகளும்!

ரு செயலின் தொடக்கமே அதன் வெற்றியில் பெரும்பங்கு வகிக்கின்றது. நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்ற கூற்றை அறிந்திருப்போம். ஆம், ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பான செயல்பாடுகள் தொடர்ந்து பயணித்து, வெற்றிக்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன. இதனுடன் சிறு சிறு நல்ல விஷயங்களும் சேரும்போது, வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற “டெக்ஸாஸ்” பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற சென்ற நூலாசிரியர் “அட்மிரல் வில்லியம் ஹச் மெக்ரவென்” அவர்கள், பல்கலைக்கழக சுலோகமான “இங்கு எது தொடங்கப்படுகிறதோ, அதுவே உலகத்தை மாற்றுகிறது” என்ற வரிகளால் தான் உத்வேகமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவே “மேக் யுவர் பெட்” என்னும் இந்தப் புத்தகத்திற்கான தூண்டுதலாகவும் இருந்துள்ளது.

படுக்கையிலிருந்து தொடக்கம்!

காலையில் கண்விழித்து படுக்கையிலிருந்து எழும் நேரத்திலேயே, அன்றைய நாளுக்கான நமது செயல்பாட்டினை சிறந்ததாக அமைத்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? நமது படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை உள்ளிட்டவற்றை மிகச்சரியாக ஒழுங்குபடுத்தி வைப்பதே அது. ஆம், அன்றைய பொழுதின் முதல் பணி சிறப்பானதாக செய்யப்படவேண்டியது அவசியம். அச்செயலானது எவ்வளவு சிறியது என்பதெல்லாம் ஒரு விஷயமல்ல. மாறாக, அது நமது ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைவதே முக்கியம்.

மிகச் சிறப்பான உந்து சக்தியுடன் பொழுதை தொடங்குவது என்பது, அன்றைய அனைத்து செயல்பாடுகளுக்கும் அதீத ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மேலும், இதுவே அன்றைய பொழுதின் முடிவில் நமக்குக் கிடைக்கப்போகும் மனநிறைவிற்கும் முக்கிய காரணியாக அமைகின்றது. சிறிய செயல்களை நம்மால் சரியாக செய்யமுடியாவிட்டால், பெரிய செயல்பாடுகளை ஒருபோதும் நம்மால் சரியாக செய்யமுடியாது. மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை படுக்கையிலிருந்தே தொடங்குங்கள்.

கூட்டணி வேண்டும்!

தனி ஒருவராக செயல்பட்டு, நம்மால் நமக்கான இலக்கினை அடைந்துவிட முடியாது. அதற்கான கூட்டுமுயற்சி அவசியம். ஆம், நமது வெற்றி மற்றவர்களை சார்ந்துள்ளது என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் நமக்கான நலம் விரும்பிகள் என முடிந்தவரை மற்றவர்களை நமது செயல்பாடுகளில் பங்குபெறச் செய்யவேண்டும். நல்ல நபர்களை உள்ளடக்கிய குழுவினரால் மேற்கொள்ளப்படும் கூட்டுச் செயல்பாடு நீடித்த வெற்றியை மட்டுமின்றி, மிகச்சிறந்த படிப்பினையையும் நமக்கு அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கான உதவிக்கு மற்றவர்களை கண்டறியுங்கள்.

மன உறுதி!

எவ்வளவு ஆற்றல் நம்முடைய இதயத்தில் உள்ளது என்பதே, ஒரு செயலுக்கான முக்கிய மூலதனம். மற்ற விஷயங்கள் அனைத்தும் இதற்கு அப்பாற்பட்டவையே என்கிறார் ஆசிரியர். ஒருவரை மதிப்பீடு செய்யும்போது, அவரின் மனத்திடத்தையே கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணிகளை அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். சாதி, மதம், நிறம், கல்வியறிவு, குடும்பப் பின்னணி மற்றும் சமூக அந்தஸ்து என அனைத்தையும் தாண்டி, நமது மன உறுதியே நமக்கான வெற்றிக்கு அடிப்படை. மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் மற்றவர்களை அவர்களின் மனதிடத்தால் மதிப்பிடுங்கள்.

பழி சொல்லாதீர்கள்!

நமது வாழ்க்கைச் செயல்பாடுகளில் நடக்கும் அனைத்து இடர்பாடுகளுக்கும், மிக எளிதாக சில வெளிப்புற காரணிகளை குறை கூறுவதே நம்மில் பெரும்பாலானோரின் செயல். எதுவும் சரியாக நடப்பதில்லை, விதி எப்போதும் நமக்கு எதிராகவே இருக்கின்றது போன்ற எண்ணங்களை தூர வீசியெறிய வேண்டியது அவசியமானது. மிகப்பெரிய வெற்றியாளர்களின் மீதான அளவீடு என்பது, துன்பமான வாழ்க்கைச் செயல்பாடுகளை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதைப் பொருத்ததே. ஹெலன் கெல்லர், நெல்சன் மண்டேலா, ஸ்டீஃபன் ஹாக்கிங் மற்றும் மலாலா போன்றவர்களே இதற்கு உதாரணம். ஆக, சூழ்நிலையையோ அல்லது விதியையோ குறை கூறாமல், தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டும். மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் குறை கூறாமல், தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.

தோல்வியே வலிமை!

எத்தனையோ தோல்விகளையும் இடர்பாடுகளையும் நாம் நமது வாழ்வில் சந்திக்கிறோம். தோல்வியின்போது சோர்ந்துவிடாமலும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து நாம் செயல்படும்போது, அந்த தோல்வியே நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகிறது. மேலும், நமக்கும் நமது அடுத்தக்கட்ட செயல்பாடுகளுக்கும் தேவையான வலிமையைத் தருவதும் தோல்விகளே. தோல்விப் பாடங்களே நம்மை வாழ்வின் மிகக் கடினமான சூழ்நிலைகளைக் கையாளுவதற்கு தயார்படுத்துகின்றது. வெற்றியாளர்கள் தங்களது தோல்விகளிலிருந்தே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலமே தங்களுக்கான அடுத்த கடினமான சூழலை நோக்கி பயணப்பட்டு வெற்றிபெறுகிறார்கள். மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

இருண்ட தருணங்கள்!

இருண்ட தருணங்கள் என்பவை தவிர்க்கமுடியாத மற்றும் ஏதோ ஒரு நிலையில் நமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள். இவை நமது ஆற்றலை சீர்குலைக்கும் வலிமை வாய்ந்தவை. மேலும், எதிர்கால திட்டங்களிலிருந்து நம்மை தனிமைப்படுத்தி முடக்கிவிடும் ஆபத்தும் இவ்வாறான இருண்ட தருணங்களினால் நமக்கு உண்டு. இந்த சூழ்நிலைகளில் அதீத எச்சரிக்கை உணர்வுடனும், அமைதியுடனும் செயலாற்ற வேண்டியது முக்கியம். மேலும், நமது ஆற்றல், மன உறுதி, உடல் வலிமை என அனைத்தையும் ஒருங்கிணைத்து, கடினமான இருண்ட தருணங்களைக் கையாள வேண்டும். மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் இருண்ட தருணங்களில் சிறப்பாக செயலாற்றுங்கள்.

நம்பிக்கை அளித்திடுங்கள்!

நம் மீதும் நமது செயல்களின் மீதும் நாம் கொண்டுள்ள நம்பிக்கையே நமக்கான வெற்றியைப் பெற்றுத்தருகிறது. அதுபோலவே, நம்மால் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் நம்பிக்கையானது பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. ஆம், இந்த பிரபஞ்சத்தின் மிகவும் வலிமை வாய்ந்த கருவி நம்பிக்கையே. அதனால் நாளைய சிறந்த நாளிற்கான நம்பிக்கையை தொடர்ந்து மற்றவர்களுக்கு அளித்திடுங்கள். மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களால் இந்த உலகையே மாற்றமுடியும் என்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் மற்றவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

எளிதில் விட்டுவிடாதீர்ள்!

ஒரு செயலை தொடர்ந்து செய்வதைக்காட்டிலும் அதை பாதியில் நிறுத்திவிடுவதோ அல்லது அதிலிருந்து வெளியேறிவிடுவதோ எளிதானதே. எவ்வளவு கடினமான நிகழ்வுகளை எதிர்கொண்டாலும், எளிதில் நமது செயல்பாட்டினை நிறுத்திவிடக்கூடாது என்கிறார் ஆசிரியர். மேலும் ஆசிரியர் தன் வாழ்நாளில், எளிதில் தங்களது செயல்களை நிறுத்திக்கொள்ள விரும்பாத நபர்களால் தொடர்ந்து கவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிக்கல்களை காரணம் காட்டி நமது செயல்பாடுகளுக்கு தடைபோட முற்படும் அனைத்து விஷயங்களையும் விடாப்பிடியாக மறுத்துவிட வேண்டியது அவசியம். இடையில் இடைமறிக்கப்படாத செயல்கள் அனைத்தும், இலக்கினை அடைந்தேதீரும் என்பதை நம் மனதில் வைத்து செயல்படுவோம்.

சிறப்பான தொடக்கம், நல்ல கூட்டணி, திடமான மனம், பழி கூறாத நிலைப்பாடு, தோல்வியின் பாடம், ஆற்றல் மற்றும் நம்பிக்கை ஆகியவையே வெற்றிப்பாதையின் படிக்கற்கள்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x