Published : 19 Aug 2023 05:07 AM
Last Updated : 19 Aug 2023 05:07 AM
சென்னை: பிளாஸ்டிக் தொழிலை ஊக்குவிப்பதற்கான 5-வது தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தொழில்துறை பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க (ஏஐபிஎம்ஏ) தலைவர் மயூர் டி ஷா கூறியதாவது: இந்திய பிளாஸ்டிக் தொழில்துறை விரைவான வளர்ச்சி கண்டு வருவதையடுத்து அதன் வர்த்தகம் 2027-ல் மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மேக் இன்இந்தியா திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், இறக்குமதியை குறைத்து அதற்கு பதிலாக உள்நாட்டிலேயே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் இந்த தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ரூ.37,500 கோடி மதிப்புக்கு 553 பிளாஸ்டிக்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக, இவற்றை நாம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தால் பெருமளவில் அந்நியச் செலாவணி சேமிக்கப்படுவதுடன், கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளையும் நாம் உருவாக்க முடியும். 2026-27-ல் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக முன்னேற்ற பிளாஸ்டிக் உற்பத்தி துறை முக்கிய பங்காற்றும்.
மேலும், பிளாஸ்டிக் துறையை மேம்படுத்துவதற்கான நிதியை உடனடியாக வழங்குவதுடன், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்திலும் இணைக்க வேண்டும். தொழில்நுட்ப மாநாட்டின் இறுதிப்பகுதி கொல்கத்தாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு மயூர் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT