Published : 17 Aug 2023 04:06 AM
Last Updated : 17 Aug 2023 04:06 AM
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20-ம் தேதிகளில் ‘ஸ்டார்ட் அப்’ திருவிழா நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது சிறு, குறு நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்குகிறது.
இதன் மூலம், கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் 19, 20-ம் தேதிகளில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளது. இதில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்தும் இந்த விழாவில் 450-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகளை காட்சிப் படுத்தவுள்ளனர். கண்காட்சியை பார்வையிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாபெரும் தொழில் கனவு என்னும் கருத்துருவோடு கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
இக்கருத்தரங்கத்தில் பங்கேற்க 1,500-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வல்லுநர்களின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், முதலீடு எவ்வாறு பெறுவது என்பது குறித்த சந்தேகங்கள், பெற்ற முதலீட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, பெண் தொழில்முனைவோருக்கான நிகழ்வு, தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. ஸ்டார்ட் அப் டிஎன் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை யில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வேலை அளிப்பவர்களின் எண்ணிக்கை கோவை உள்ளிட்ட ஒரு சில நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் குறைவாகவும் உள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்றவேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இதற்கு ஸ்டார்ட் அப் திருவிழா என பெயர் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT