Published : 07 Nov 2017 09:59 AM
Last Updated : 07 Nov 2017 09:59 AM
ப
ணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால், மத்திய அரசு கடும் விமர்சனத்துக்கு ஆளானாலும் , சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளது இந்தியா. இதற்காக மோடி அரசின் நடவடிக்கையைப் பாராட்டி இருக்கிறது உலக வங்கி.
உலக வங்கி வெளியிட்ட தொழில் நடத்த சாதகமான நாடுகளின் பட்டியலில் ஒரே ஆண்டில் 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை எந்த நாடும் ஒரே ஆண்டில் 30 இடங்கள் முன்னேற்றம் கண்டதில்லை என உலக வங்கி வியப்பை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியுள்ளது இந்தியா.
ஆர்வமும், திறமையும் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்க இறங்குகிறார்கள். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் சொந்த தொழில் தொடங்க தைரியம் வேண்டும். தொழில் தொடங்க அரசின் அனுமதிகள், சந்தையில் நிலவும் கடுமையான போட்டி இவற்றை சமாளித்து நிற்பதே பெரிய விஷயம் என்பார்கள். ஆனால் இந்த நிலைமை மாறி வருகிறது. அரசாங்கத் தரப்பில் இருக்கும் முட்டுக்கட்டைகள் குறைகின்றன. மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அளிக்கின்றன. மத்திய அரசும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தியுள்ளது. அதன் பிரதிபலிப்புதான் உலக வங்கியின் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் முன்னேற்றம்.
2004-ம் ஆண்டிலிருந்தே இந்த தரவரிசை பட்டியலை உலக வங்கி வெளியிடுகிறது. தொழில் தொடங்க அனுமதி, தொழிற்சாலை கட்டிடங்கள் கட்ட அனுமதி, மின் இணைப்பு, சொத்துகளை பதிவு செய்தல், கடன் பெறுதல், நிறுவனத்தின் சிறு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு, எளிமையான வரித் தாக்கல், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்ய அனுமதி, ஒப்பந்தங்களை மதித்து நடப்பது, நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போனால், அதை மூடுவதற்கான எளிய விதிமுறைகள் போன்ற 10 விஷயங்களின் அடிப்படையில் ஒரு நாடு எந்த அளவுக்கு தொழில் தொடங்க சாதகமாக இருக்கிறது என்பதை உலக வங்கி கணிக்கிறது. இவை எளிமையாக இருந்தால்தான் நிறுவனத்தை தொடங்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற இந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற விஷயங்களில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராமல் இருக்க வேண்டும் என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். சம்பாதிப்பது அடுத்த கட்டம்தான். உள்நாட்டுக் கலவரம், ஸ்திரமில்லாத ஆட்சி, திறமை இல்லாத ஊழியர்கள் இதெல்லாம் இருந்தால் அந்த நாட்டில் முதலீடு செய்ய மாட்டார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினைகள் எதுவுமே இல்லை. பொருளாதார சீர்திருத்தங்களால்தான் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகம் குவிகின்றன. 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அந்நிய முதலீடு 3600 கோடி டாலர். இது கடந்த ஆண்டில் 2 மடங்கு அதிகரித்து 6 ஆயிரம் கோடி டாலராக உள்ளது.
``தொழில் தொடங்க சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. ஒரே ஆண்டில் 30 இடங்கள் முன்னேறுவது மிகப் பெரிய சாதனை. எந்த நாடுமே இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டதில்லை. இது கொண்டாட வேண்டிய தருணம்'' என உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டலினா ஜார்ஜியேவா புகழ்ந்துள்ளார்.
உலக வங்கியின் 2017-ம் ஆண்டுக்கான பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 2-வது இடத்திலும், டென்மார்க் 3-வதாகவும், அமெரிக்கா 6-வதாகவும், இங்கிலாந்து 7-வது இடத்திலும் உள்ளன. குட்டி நாடான மலேசியா 24-வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 78-வது இடத்திலும், பாகிஸ்தான் 147-வது இடத்திலும் உள்ளன. கடைசி இடமான 190-வது இடத்தில் ஆப்பிரிக்க நாடான சோமாலியா உள்ளது.
``போட்டியில் பங்கேற்று ஓடுவது பெரிய விஷயமல்ல. வெற்றி பெறுவதற்கு வேகமாக ஓட வேண்டும். எல்லா நாடுகளுமே தொழில் தொடங்க சாதகமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது, பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் இந்தியாவின் இலக்கான முதல் 50 நாடுகளின் பட்டியலில் இடம் பெற முடியும்'' என நம்பிக்கையோடு சொல்கிறார் கிறிஸ்டலினா.
``இந்தியா போன்ற மிகப் பெரிய, பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஒரு சிறிய வெற்றி, அடுத்தடுத்து மிகப் பெரிய வெற்றிகளை கொண்டு சேர்க்கும்.'' என உறுதியளிக்கிறார் அவர்.
உலக வங்கியின் இந்த தர மதிப்பீட்டை கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடியே, ``உலக வங்கி கட்டிடத்தையே நான் பார்த்ததில்லை. ஆனால் உலக வங்கியோடு இணைந்து பணியாற்றியவர்களே அதன் செயல்பாட்டை சந்தேகப்படுகிறார்கள்'' என கிண்டல் செய்திருக்கிறார். இது குறித்து கிறிஸ்டலினா பேசும்போது, ``உலக வங்கியின் ஆய்வு முறைகள், புள்ளி விவரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. ஆய்வு தகவல்கள் பொது வெளியில் வெளியிடப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் தர வரிசைப்படுத்தலாம். தர வரிசைப் பட்டியலில் சில நாடுகளின் ரேங்கிங் குறையும்போது, அவை ஆய்வு முறை சரியில்லை எனக் கூறுவது உண்டு. ஆனால் அதில் உண்மையில்லை'' என்கிறார்.
``வறுமையை ஒழிப்பதில் இந்தியாவின் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது. பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது. உலகத் தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் திறமையானவர்கள். ஆனால் அவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு செல்கிறார்கள். இது மிகவும் குறைவுதான் என்றாலும் பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளால் இது அதிகரிக்கும்''
``ஜிஎஸ்டி அமலாக்கம் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தம். நான் ஐரோப்பாவை சேர்ந்தவள். ஐரோப்பிய யூனியன் ஒரே சந்தையாக இருப்பதன் பலனை அறிந்தவள் நான். அதேபோல் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி விகிதம் என்பது தொழில் நிறுவனங்களைப் பொருத்தவரை மிகவும் சாதகமான விஷயம். இது மிகப் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். சில ஆண்டுகள் முன்புவரை ஏழை நாடுகளாக இருந்து இன்று பணக்கார நாடுகளாக வளர்ந்திருக்கும் நாடுகளின் வரலாற்றைப் பார்த்தால் இது புரியும்'' என்கிறார் கிறிஸ்டலினா.
இந்தியாவின் இந்த தர மதிப்பீடு ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்த நிலைமையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதையும் கணக்கில் எடுத்திருந்தால், மேலும் சிறப்பான இடத்தை இந்தியா பிடித்திருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
- ravindran.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT