Published : 09 Aug 2023 02:04 PM
Last Updated : 09 Aug 2023 02:04 PM
விருதுநகர்: தென் மாவட்டங்களில் சர்க்கரை ஆலை இல்லாததால், இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. தென் மாவட்டத்தில் அரசு சர்க்கரை ஆலையைத் தொடங்க வேண்டும் என கரும்பு விசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
வறட்சியான மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானிய பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு பாதியாகக் குறைந்துள்ளது.
அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கு பல ஆண்டுகளாக நிலுவைத் தொகை கொடுக்கப்படாததே இதற்குக் காரணம். இதனால், விருதுநகர் அருகே எரிச்சநத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வந்த கரும்பு பயிர், சுமார் 2,500 ஹெக்டேராக குறைந்துள்ளது.
அதுவும், இந்த ஆண்டு மாவட்டத்தில் வெறும் 250 ஹெக்டேர் மட்டுமே கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூரில் இயங்கி வந்த தரணி சர்க்கரை ஆலைக்கு விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 2018-ல் இந்த ஆலை திடீரென அரைவையை நிறுத்தியது.
இதனால், விருதுநகர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 300 விவசாயிகளுக்கு ரூ.5 கோடி வரை நிலுவைத் தொகை தர வேண்டி இருந்தது. அதனால், அதன் பிறகு கரும்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. கரும்பு விவசாயிகள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் இன்றி கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டுவது இந்த ஆண்டு குறைந்துவிட்டது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா மற்றும் கரும்பு விவசாயிகள் கூறியதாவது: தரணி சர்க்கரை ஆலை மூடப்பட்டு திவால் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அந்த ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகள், அதற்கான தொகை கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 600 விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வரை நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. சர்க்கரை துறை ஆணையரின் உத்தரவின்பேரில் கரும்பை அரைவைக்கு அனுப்பினோம். ஆனால், இன்று அதற்கான நிலுவைத் தொகை கிடைக்கவில்லை.
சிவகங்கை மற்றும் தேனியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கே தற்போது கரும்பு அனுப்புகிறோம். போக்குவரத்துச் செலவை ஆலையே ஏற்க வேண்டும். ஆனால், 10 டன், 20 டன் ஏற்றினால்தான் போக்குவரத்துச் செலவை ஏற்போம் என ஆலை நிர்வாகம் கூறுகிறது. குறைந்த அளவு கரும்பை அனுப்பும் போது போக்குவரத்து செலவுக்காக டன்னுக்கு ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்கின்றனர்.
ஒரு டன்னுக்கு கொள்முதல் விலை ரூ.2,715. அதில் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்வதால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் இல்லை. இதனால் இப்பகுதி கரும்பு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவதால் கரும்பு உற்பத்தியும் பாதிக்குமேல் குறைந்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் தக்காளிக்கு ஏற்பட்டதைப்போல சர்க்கரைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே, தென் மாவட்டங்களில் அரசு சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT