Published : 11 Nov 2017 10:13 AM
Last Updated : 11 Nov 2017 10:13 AM
இன்சைட் பற்றி போன வாரம் பேசினோம். தூக்க கலக்கத்
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு என்ன தொழில் செய்யலாம், எதில் லாபம் அதிகமிருக்கும் என்று பலர் அடுத்த பெரிய பிசினஸ் ஐடியாவை தேடிக்கொண்டிருக்க, இன்சைட் தேடியவர்கள் சிலர் மட்டுமே. ஒன்றும் வேண்டாம், இன்று இத்தனை ஸ்வீட் கடைகள் வரும் என்று அன்று எத்தனை பேர் நினைத்திருப்பார்கள்? நீங்களும் நானும் நினைத்தோமோ? ஆனால் ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’, ‘க்ராண்ட் ஸ்வீட்ஸ்’ போன்ற கம்பெனிகாரர்கள் நினைத்தார்கள். ஊரெங்கும் கடை திறந்தார்கள். காரசாரமாய் விற்பனை செய்து ஸ்வீட்டாய் வெற்றி பெற்றார்கள்!
நீங்களும் நானும் தான் ஸ்வீட் தின்றோம், தொழில் செய்ய ஆசைப்பட்டோம், அவர்களால் மட்டும் எப்படி இந்த மார்க்கெட்டை சரியாக கணிக்க முடிந்தது? நாம் புதிய தொழில் துவங்க ஐடியா தேடினோம். அவர்கள் புதிய பாதையில் செல்ல இன்சைட் தேடினார்கள். சமூகத்தில் கூட்டு குடும்பங்கள் குறைந்து நியூக்ளியர் குடும்பங்கள் பெருகுவதை கண்டார்கள். அதோடு பெண்கள் வேலைக்கு போவது அதிகரிப்பதை கண்டார்கள். இரண்டையும் கூட்டி கழித்தார்கள். நல்ல நாள், விசேஷம், பண்டிகை என்றால் வீட்டில் ஸ்வீட், பலகாரம் செய்ய, அதை எப்படி செய்வது என்று சொல்லித்தர அம்மா, அத்தை, மாமியார் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை கற்றுக்கொள்ள மகளுக்கும், மருமகளுக்கும் நேரமில்லை என்பதை கவனித்தார்கள். இன்றைய பெண்களும் சரி அவர்கள் மகள்களும் சரி ஸ்வீட், கார வகைகள் வாங்க கடைகளைத்தான் தேடுவார்கள் என்று உணர்ந்தார்கள். அருகிலேயே சென்று வாங்கும் வசதியுடன் ஊரெங்கும் கடை திறந்தார்கள். தங்கள் வெற்றியின் கதவுகளையும் சேர்த்து திறந்தார்கள். இன்று அக்கடைகளின் தயவில் தான் பல தமிழ் குடும்பங்கள் பண்டிகை கொண்டாடி பலகாரங்கள் சுவைக்கிறார்கள்!
நாமும் பெண்கள் வேலைக்கு செல்வதை பார்த்தோம். கூட்டுக் குடும்பங்கள் கழித்தல் குடும்பங்களாக சுருங்குவதை கண்டோம். என்ன பிரயோஜனம். ஐடியாவை தேடிக்கொண்டிருந்த சுவாரசியத்தில் இன்சைட் பெற மறந்தோம்.
நம்மை சுற்றி நடப்பவைகளை புதிய கோணம் கொண்டு பார்க்கும் கலையை வளர்த்துக்கொள்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. புதிய கோணம் கொண்டு பார்த்து, விஷயங்களின் அடித்தளத்தை அறிந்து அர்த்தங்களை புரிந்துகொள்வதற்கு தேவை இன்சைட். சரி, வியாபாரத்தில் ஏன் இது போல் அனைவருக்கும் இன்சைட் கிடைப்பதில்லை? இதற்குக் காரணம் நம்மில் பலர் தொழில் செய்யும் முறை. நிர்வாகம் நடத்திச் செல்லும் விதம்.
நடக்கப்போவதை சரியாக கணிக்கவேண்டும் என்பதில் தான் கம்பெனிகள் முன்னுரிமை தருகின்றன. ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் அதற்கு தடையாக இருக்கும் என்று நினைக்கின்றன. எதையும் பர்ஃபெக்ட்டாக செய்யவேண்டும் என்று அதிலேயே குறியாய் இருக்கும் கம்பெனிகள் தப்பித் தவறி நிகழும் தப்புகளைக் கூட ஒப்புக்கொள்ள மறுக்கிறது. தப்பு நடப்பதே தப்பு என்கிறது. கம்பெனியின் செயல்பாடு, திட்டங்கள் சீராக நடப்பதை தடுக்கும் எந்த விஷயத்தையும் கம்பெனிகள் விரும்புவதில்லை.
இது ஒன்றும் தவறில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். இன்சைட்டின் முதல் எதிரி முன்னறிந்து யூகிக்கக்கூடிய தன்மை. ஏனெனில் இன்சைட் என்பது ஒரு விதத்தில் சீர்குலைக்கும் தன்மை (Disruptive) தானே. இன்சைட் சொல்லிக்கொண்டு வரும் ரகமில்லையே. வருங்காலத்தில் நியூக்ளியர் குடும்பங்கள் பெருகப்போகிறது என்பதை 80களில் எத்தனை பேர் நினைத்தோம்?
இன்சைட்டுகள் ரிஸ்க்கானவை. ஆராயப்படவேண்டியவை. நேரம் செலவழித்து மெனெக்கெட்டு கண்டுபிடிக்க வேண்டியவை. செய்யும் வேலையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பக்கூடியவை. இன்னும் சொல்லப் போனால் இன்சைட்டுகள் நம் சிந்தனைகளில் ஒருவித ஒழங்கற்ற தன்மையை எதிர்பார்ப்பவை.
நம் புரிதல்களில், நடவடிக்கைகளில், எண்ணங்களில், குறிக்கோள்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை இன்சைட்டுகள். இதற்கு பல கம்பெனிகள் தயாராய் இருப்பதில்லை. ஓடுற ஓட்டத்தை மட்டுமே ஓடிக்கொண்டு, செய்த வேலையை செய்துகொண்டு அரைத்த மாவை அரைக்க தான் பல கம்பெனிகள் விரும்புகின்றன. புதியதாய் ஒன்று வந்தால் அது தங்கள் செயலமைப்பை சீர்குலைக்கும் என்று அதை பார்ப்பதில்லை. பிறகெப்படி இன்சைட்டுகள் கிடைக்கும்?
போதாக்குறைக்கு பெரும்பாலான கம்பெனிகளில் உள்ள படிநிலை கட்டமைப்பு இன்சைட்டுகளை வடிகட்டி அவை மேலும் ஆராயப்பட, மேலும் வளர்க்கப்படாமல் தடுத்துவிடுகின்றன. இன்சைட்டுகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. இது எப்படி நடக்கிறது என்பதை ஒரு உண்மை நிகழ்வு கொண்டு புரிந்துகொள்வோம்.
2001 வருடம் ஜூலை மாதம். அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு FBIயின் அரிஸோனா மாநில ஸ்பெஷல் ஏஜெண்ட் `கென்னத் வில்லியம்ஸ்’ எதேச்சையாய் ஒரு விஷயத்தை கண்டார். ஃபீனிக்ஸ் நகரில் அரபு நாட்டை சேர்ந்த சிலர் விமான பயிற்சி எடுத்து வருவதைக் கண்டார். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை தான். ஆனால் அவர்கள் விமானம் ஓட்ட மற்றுமே கற்றுக்கொள்ள விரும்புவதையும் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் பயிற்சிகள் மீது ஆர்வமில்லாமல் இருப்பதையும் கண்டார். டேக் ஆஃப் செய்யத் தெரியாமல் ஒருவரால் எப்படி விமானம் ஓட்ட முடியும்? ஓட்டியது போதும் என்று ப்ளேனை லேண்டிங் செய்ய வேண்டாமா? இதில் வில்லங்கம் இருக்கலாம் என்று தன் சந்தேகத்தை FBI தலைமை செயலகத்திற்கு கடிதம் எழுதினார். உலகையே உலுக்க போகும் சதியை பற்றிய இக்கடிதத்தை ‘ஃபீனிக்ஸ் மெமொ’ என்றே அழைக்கிறார்கள்.
அக்கடிதத்தில் இது தீவிரவாதிகள் சதியாக இருக்கலாம் என்ற தன் சந்தேகத்தை விவரித்திருந்தார் வில்லியம்ஸ். மற்ற ஊர்களிலும் இது போல் பயிற்சி எடுக்கிறார்களா என்று ஆராயவேண்டும் என்றும், இதைப் பற்றிய அமெரிக்காவின் மற்ற பாதுகாப்புத் துறைகளான சிஐஏ, என்எஸ்ஏ போன்றவைகளின் ஒருங்கிணைந்த விசாரணை துவங்கவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
எப்பேற்பட்ட துப்பு. தீவிரவாதிகளின் திட்டத்தை படம் வரைந்து பாகங்களை குறிக்கும் கடிதம். லட்டு போல் கிடைத்த செய்தியை வைத்து FBI என்ன செய்தார்கள்? ஒரு எழவும் செய்யவில்லை. அசாதாரணமான இந்த எச்சரிக்கை நினைத்துப் பார்க்கவே முரணாக இருப்பதாக கருதி உயர் அதிகாரிகள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அந்த எச்சரிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்பாமல் அமுக்கிவிட்டார்கள்.
அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடந்தது என்பதையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளை உலகமறியும். பிறகு நடந்த விசாரணைகளில் FBI யின் தலைவர் ‘ராபர்ட் ம்யூளர்’ 9/11 பற்றி தங்களுக்கு எந்தவித துப்போ, தகவல்களோ கிடைக்கவில்லை என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்தார். மேலதிகாரிகளுக்கு செல்ல முடியாத அளவிற்கு அந்த ஃபீனிக்ஸ் மெமோ எப்படி இருட்டிப்பு செய்யப்பட்டது என்பதை கவனியுங்கள்.
நெருப்பிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை எழுந்த கதை படித்திருப்பீர்கள். ஃபீனிக்ஸிலிருந்து எழுந்த இந்த நெருப்பு அமெரிக்காவை சுட்டெரித்த கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன? அரசாங்கம் முதல் கம்பெனிகள் வரை, வாழ்க்கை முதல் வியாபாரம் வரை இப்படித் தான் இன்சைட்டுகள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. நம் அறிவிற்கு அப்பாற்பட்டு தெரியும் அசாதாரணங்களை இப்படித்தான் அலட்சியப்படுத்துகிறோம். நம் கண் முன்னே இருக்கும் வாய்ப்புகளை இழக்கிறோம். தடுப்புகள் போட்டு நாம் நினைப்பதற்கு புறம்பான செய்திகள், நாம் எண்ணியிருக்கும் உண்மைகளுக்கு மாறான விஷயங்களை தேடாமல் விடுகிறோம். கிடைத்ததையும் கிடப்பில் போடுகிறோம்.
இன்சைட்டுகள் பெற ஆச்சரியங்களுக்கு தயாராக வேண்டும். அதிசயங்களை அரவணைக்கவேண்டும். அதிர்ச்சிகளை ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு நீங்கள் ரெடியா?
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT