Published : 19 Nov 2017 08:48 AM
Last Updated : 19 Nov 2017 08:48 AM
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க, விவசாயத்தை ஒரு வியாபாரமாக நடத்த வேண்டுமென மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச விவசாய கருத்தரங்கில் கூறினார்.
விசாகப்பட்டினத்தில் கடந்த 3 நாட்களாக சர்வதேச விவசாய கருத்தரங்கு நடைபெற்று வந்தது. இந்த கருத்தரங்கை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். இதில், தற்போதைய காலகட்டத்தில் விவசாய தொழிலை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைத்து செயல்படுவது குறித்து 61 நாடுகளைச் சேர்ந்த விவசாயத் துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்து்களை கூறினர்.
இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் கலந்து கொண்டு பேசியதாவது: ஆந்திர மாநிலத்தின் எதிர்காலம் விவசாயிகளின் கையில் உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். தற்போது, இந்த கருத்தரங்கில் விவசாயத்தை செழிக்க செய்ய நவீன தொழில் நுட்பம் உபயோகிப்பது குறித்து அனைவரும் பேசியது வரவேற்கத்தக்கது. விவசாயத்தில் விவசாயி நஷ்டம் அடையாமல் இருக்க, இந்த தொழிலையும் ஒரு வியாபாரமாக பார்ப்பது அவசியம். அப்போதுதான் இதில் நஷ்டம் வராமல் தடுக்க இயலும். விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம் வருவது அவசியம். இந்தியாவில் சிறிய விவசாயிகளே அதிகம் உள்ளனர். இவர்களிடம் நவீன தொழில் நுட்பம் சென்றடைய வேண்டும்.
விவசாயத்தில் நவீன தொழில் நுட்பத்தை ஏற்றுகொள்ள ஆந்திரா முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இனி ஆந்திராவுடன் இணைத்து விவசாய மார்க்கெட்டிங், விவசாய உற்பத்தியை பெருக்குவது, நவீன தொழில்நுட்பத்தை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிப்பது போன்றவற்றை கைகோர்த்து செய்வோம்.
இந்தோனேஷியாவில் அங்குள்ள வல்லுனர்களின் தொழில்நுட்பத்தால் விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த நிலையை இந்தியாவிலும் கொண்டு வருவோம். பசுக்களை அதிகரிப்பது, பால் உற்பத்தி போன்றவற்றிலும் நவீன தொழில்நுட்பம் அவசியம். மெகா சீட் (விதை) பார்க் மூலம் விவசாயம் நல்ல வளர்ச்சி அடையும். இது ஆந்திராவில் அமைய உள்ளது. வருங்காலத்தில் விதை உற்பத்தியில் ஆந்திரா விவசாய துறையில் முன்னேற்றம் காணும் எனும் நம்பிக்கை உள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு, விவசாய உற்பத்தியின் விலை நிர்ணயம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிய வேண்டும். இவர்களிடமிருந்து வியாபாரிகள் நேரிடையாக பொருட்களை வாங்க வேண்டும். இயற்கை சூழலுக்கு ஏற்ப விவசாய உற்பத்தி நடைபெறுவது அவசியம். இதனை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT