Published : 04 Nov 2017 09:54 AM
Last Updated : 04 Nov 2017 09:54 AM

வெற்றிக்கு வழிகாட்டும் உள்ளுணர்வு!

`என் பிசினஸுக்கு ஒரு நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்களேன்’ என்பவர்களை பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். நீங்களே கூட ஐடியாவை தேடுபவராக இருக்கலாம். ஐடியா தேடுவது தப்பில்லை. ஆனால் ஐடியாவை விட சக்தி வாய்ந்த ஒன்று, ஆயிரம் ஐடியாக்களை அள்ளி தரும் ஐடியாக்களின் தாய் ஊற்று ஒன்று உண்டென்றால் அதை தேடுவது புத்திசாலித்தனம் அல்லவா!

பிசினஸ் வெற்றி என்பது வெறும் ஐடியாக்களால் வருவதல்ல. ஆழமான இன்சைட் (உள்ளுணர்வு) மூலம் பெறப்படுவது. இன்சைட் என்பது ஒரு சூழ்நிலை, ஒரு நிகழ்வைப் பற்றிய தெளிவான புரிதலை தரும் கோணம் அல்லது செய்திகள் மற்றும் டேட்டாவின் ஆய்வு கொண்டு பெறப்படும் உண்மை. இன்சைட் என்பது ஒரு விஷயத்தை மற்றவர் பார்க்காத கோணத்தில் பார்ப்பது. அதன் மூலம் அதன் ஆழமான காரணத்தை புரிந்துகொள்வது. அதன் மூலம் தெளிவு பெறுவது.

ஜெர்மனியில் உருவான ‘ஜெஸ்டால்ட் உளவியல்’ (Gestalt Psychology) என்னும் பிரிவிலிருந்து பிறந்த கோட்பாடுதான் இன்சைட். குழப்பமான உலகை சரியான கோணத்தில் பார்க்கவைத்து தெளிவான புரிதலைப் பெற உதவும் விதிகளின் ஆழமான ஆய்வுதான் ஜெஸ்டால்ட் உளவியல்.

நாம் சிறு வயதில் நமக்குத் தேவையான ஒன்றை யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று புரிந்து கேட்டது ஐடியா அல்ல, இன்சைட். அம்மாவிடம் ஐஸ் க்ரீம் கேட்டால் ஜுரம், பல்லுக்கு கெடுதல் என்று காரணம் காட்டி வாங்கித் தரமாட்டாள் என்று அப்பாவிடம் கேட்டு பெற்றது இன்சைட். ஸ்கூல் எஸ்கர்ஷன் போக அப்பா சம்மதம் தர மட்டார் என்று அம்மா மூலம் கேட்டு பர்மிஷன் வாங்கியது இன்சைட். ஆக, என்ன கேட்டால் கிடைக்கும் என்பது வெறும் ஐடியா. எதை எதை யாராரிடம் எப்படி, எப்பொழுது கேட்டால் கிடைக்கும் என்று தெரிந்து கேட்டோம் பாருங்கள், அது இன்சைட்!

இன்சைட்டுகளை பற்றி பல காலமாக ஆராய்ச்சி செய்து வரும் ‘கேரி க்ளைன்’ ‘Seeing What Others Don’t’ என்ற தன் புத்தகத்தில் இன்சைட்டுகளின் வலிமையை உணர்த்தும் உண்மை நிகழ்வு ஒன்றை விளக்குகிறார். ரோந்து பணியில் இருக்கும் இரண்டு போலிஸ்காரர்கள் ஒரு சிக்னலில் நிற்க அவர்கள் அருகில் விலையுர்ந்த ‘பிஎம்டபிள்யூ’ கார் வந்து நிற்கிறது. அதை ஓட்டி வந்தவர் ஸ்டைலாக சிகரெட்டை இழுத்து காருக்குள்ளேயே சிகரெட் சாம்பலைத் தட்டுகிறார். இதை நீங்களும் நானும் பார்த்திருந்தால் ‘தரித்திரம் பிடித்தவன், அழுக்கு பணக்காரன்’ என்று நினைத்து திரும்பியிருப்போம். ஆனால் அதைப் பார்த்த போலீஸ்காரர்களுக்கு பட்டென்று பொறி தட்டியது. விலையுயர்ந்த புத்தம் புது காருக்குள் ஒருவன் சிகரெட் சாம்பலை தட்டினால் அது அவன் காராக இருக்க முடியாது, திருட்டு காராகத்தான் இருக்கும் என்று பாய்ந்து அந்தக் காரை மடக்கினர். அவர்கள் இன்சைட்டிற்கேற்ப அது திருட்டு கார்தான். ஓட்டிக்கொண்டு வந்தவன் கைது செய்யப்பட்டான்!

வாழ்க்கையை விடுங்கள். வியாபாரத்திலும் தேவை இன்சைட். உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் என்று புகழப்படுவர் ‘வாரன் பஃபெட்’. தொட்டதெல்லாம் பொன்னாகும் இந்த ராஜா கைய வச்சா முதலீட்டு உலகில் ராங்கா போனதே இல்லை. இவர் எங்கு முதலீடு செய்கிறார் என்று பார்த்து அதை காப்பி அடித்து முதலீடு செய்ய ஒரு பெரிய கூட்டமே உண்டு. தன் கம்பெனி ‘பெர்க்ஷையர் ஹாத்வே’ பங்குதாரர்களுக்கு பஃபெட் எழுதும் கடிதம் பிரசித்தம். அக்கடிதங்களின் தொகுப்பை பகவத் கீதையாய் நினைத்து பயபக்தியுடன் படித்து பாராயானம் செய்யும் ரசிகரடிப்பொடி ஆழ்வார்கள் உண்டு! அக்கடிதங்களில் பஃபெட் தருவது ஐடியக்கள் அல்ல. இன்சைட்டுகள். எந்த கம்பெனியில், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், எப்பொழுது விற்கவேண்டும் என்று இவர் கூறுவதில்லை. கம்பெனிகளை எப்படி ஆராயவேண்டும், எதை மனதில் வைத்து முதலீடு செய்யவேண்டும் என்ற இன்சைட்டுகளை தான் இவர் அளிப்பார்.

பல ஆண்டுகளுக்கு முன் ‘ஜில்லெட்’ கம்பெனி பங்குகளை ஏகத்துக்கு வாங்கினார் பஃபெட். மற்ற முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியம். டெக்னாலஜி கம்பெனிகள், வருங்கால வின்னர்கள் என்று போற்றப்படும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் என்று முதலீட்டுக்கு பல கம்பெனிகள் இருக்க எதற்கு இந்த கிழவர் போயும் போயும் ஒரு அல்ப ஷேவிங் கம்பெனி பங்குகளை வாங்குகிறார் என்று. இவர் பெரிய தவறு செய்கிறார் என்றே பலர் முடிவு செய்தனர். எதற்கும் அவரிடமே கேட்போம் என்று அவர் செயலுக்கு காரணம் கேட்டனர். பஃபெட் சிரித்துக்கொண்டே ‘உலகில் மூன்று பில்லியன் ஆண்கள் வசிக்கிறார்கள். நான் தினம் இரவு படுக்கப் போகும் போது அத்தனை பேர் முகத்திலும் ரோமம் முளைத்துக் கொண்டிருக்கிறது என்ற நிம்மதியோடு தூங்குகிறேன்’ என்றார்!

புரிகிறதா? இவர் தந்தது முதலீடு செய்ய ஐடியா அல்ல. எப்படி முதலீடு செய்யவேண்டும் என்ற இன்சைட்டை. தயாரிப்பது சாதாரண ஷேவிங் பொருள் என்றாலும் உலகெங்கும் தினம் உபயோகிக்கும் பொருள் என்பதால் ஜில்லெட்டின் விற்பனைக்கும் லாபத்திற்கும் குறைவே கிடையாது என்னும் ஆழமான இன்சைட்டை அளித்து இப்படித்தான் முதலீடு செய்யவேண்டிய கம்பெனிகளை அணுகவேண்டும் என்று அனைவருக்கும் பஃபெட் உணர்த்தினார்!

இன்சைட் என்பது அந்த ‘ஆஹா’ தருணம். பிரச்சினையை அலசும்போது பட்டென்று ‘கண்டேன் சீதையை’ என்ற சந்தோஷக் கூக்குரலிட வைக்கும் விடை தான் இன்சைட். ஒரு பிரச்சினை புதிய வகையில் பார்ப்பது, பிரச்சினையை அதோடு சேர்ந்த வேறொரு பிரச்சனை அல்லது அதன் தீர்வோடு கனெக்ட் செய்வது, பிரச்சனையைத் தீர்க்க தடையாய் இருக்கும் பழைய அனுபவங்களின் தாக்கத்தை ஒதுக்குவது இவை எல்லாமே இன்சைட் தான். ஒரு விஷயத்தின் ஆழமான இன்சைட்டை பெற்றுவிட்டால் பின் அதை வேறு எந்த கோணத்திலும் உங்களால் பார்க்க முடியாது.

பேசுவதை நிறுத்தி செயலில் இறங்க வைக்கும் வல்லமை படைத்தது இன்சைட். நிர்வாகவியல் தந்தை என்று போற்றப்படுபவர் ‘பீட்டர் ட்ரக்கர்’. அறுபதாண்டு காலம் நிர்வாக முறைகளை, பிசினஸ் சூட்சமங்களை ஆயிரக்கணக்கான கட்டுரைகள், முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மூலம் நமக்கு கற்றுத் தந்தவர். பிசினஸ் வெற்றிக்கு ஐடியா கிடைக்கும் என்ற அவர் எழுத்துகளை படித்தால் ஒரு எழவும் கிடைக்காது. ஏனெனில் ட்ரக்கர் நமக்கு தந்துவிட்டு போயிருப்பது ஐடியாக்கள் அல்ல, பிசினஸை வெற்றிகரமாக நடத்த தேவையான இன்சைட்டுகளை.

உலகை வேறு கோணத்தில் பார்க்க வைக்கும் ஆழமான கேள்விகள் மூலம் உணர்த்துவார் ட்ரக்கர். ஒரு முறை தன் கம்பெனியை எப்படி ஆய்வு செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஒரு சிஇஓ-விடம், ‘இது உங்கள் கம்பெனி இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இக்கம்பெனியை முழுவதுமாய் வாங்குவீர்களா’ என்று கேட்டார் ட்ரக்கர். தன் கம்பெனி சரியான பாதையில் போகிறதா, இதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற கேள்விகளுக்கான பதில்களை பெற எத்தனை விவேகமான வழி பாருங்கள். ஒரு கம்பெனியை நடத்தும் முறைக்கான ஐடியா அல்ல இக்கேள்வி. ஒரு கம்பெனியை எப்படி அணுகவேண்டும், அதை எப்படி ஆராயவேண்டும், எவ்வாறு அலசவேண்டும் என்று நமக்கு கற்றுத்தரும் இன்சைட் இது.

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் இன்சைட்டை பெறும் வழியை வளர்த்துக்கொள்ள முடியுமா? பேஷாக முடியும். அதற்கென்ன செய்யவேண்டும்? அடுத்த வாரம் தொடரும் இக்கட்டுரையை படிக்கவேண்டும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x