Published : 03 Aug 2023 01:05 PM
Last Updated : 03 Aug 2023 01:05 PM

பொருளாதார தரவரிசை | ஏறுமுகத்தில் இந்தியா; சரியும் சீனா - மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்த தரவரிசையை வெளியிட்டுள்ள அமெரிக்க நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, இந்தியப் பொருளாதாரம் ஓவர் வெயிட் என்ற நிலையில் உள்ளதாகவும், சீனா சரிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஓவர்வெயிட் ரேட்டிங் என்பது பொருளாதாரம் சிறப்பாக இயங்கும் என்பதற்கான கணிப்பு. அந்த வகையில் எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பதால் அதற்கு மோர்கன் ஸ்டான்லி ஓவர்வெயிட் தரம் வழங்கியுள்ளது. இதற்கு இந்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டதே காரணம் என்று தெரிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளானது வலுவான கேப்பெக்ஸ் எனப்படும் திட்டச் செலவு (capex - capital expenditure) மற்றும் லாப போக்குக்கு வழி வகுத்துள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கை கூறுகின்றது.

இந்தியாவின் பொருளாதார ரேட்டிங் ஓவர்வெயிட் ஆக உள்ள நிலையில் அமெரிக்க அதன் ட்ரிபிள் ஏ (AAA ) தகுதியை இழந்துள்ளது. சீனா பொருளாதார சரிவை நோக்கிச் செல்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று தாக்கத்துக்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து 6.2 சதவீத ஜிடிபி-யை நோக்கி முன்னேறுவதாக மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம், "இந்தியா தற்போது வளர்ந்துவரும் சந்தைகளில் மிகவும் வசீகரமானதாக இருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக இந்தியா முதலீட்டுச் சந்தை தரவரிசையில் 6வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா தற்போது நீண்ட வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது. சீனாவின் வளர்ச்சி முடிவுக்கு வரும் சூழலில் உள்ளது" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அண்டர் வெயிட் ரேட்டிங்கில் இருந்து ஈக்வல் வெயிட் பிரிவுக்கு முன்னேறியதாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது அந்த தரவரிசையில் மீண்டுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெகு குறுகிய காலத்தில் இந்தியப் பொருளாதாரம் இந்த வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x