Published : 03 Aug 2023 07:37 AM
Last Updated : 03 Aug 2023 07:37 AM

தமிழகத்தில் காப்பீடு குறித்து விழிப்புணர்வு திட்டங்கள்: எச்டிஎஃப்சி எர்கோ தகவல்

சென்னை: எச்டிஎஃப்சி எர்கோ காப்பீட்டு நிறுவன இணை மேலாண்மை இயக்குநர் அனுஜ் தியாகி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) 2047-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற நிலையை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4.2 சதவீதம் பேர் மட்டுமே காப்பீடு எடுத்துள்ளனர். தமிழகத்தில் 3.3 சதவீதம், புதுச்சேரியில் 2.7 சதவீதம் பேர் மட்டுமே காப்பீட்டு வசதியை பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காப்பீடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை எச்டிஎஃப்சி எர்கோ நிறுவனத்திடம் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்படைத்துள்ளது.

இதற்காக, மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டமானது காப்பீட்டில் மக்களை சேர்ப்பது முதல் அதற்கான மேம்பாடு, அதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தும் நபர், மாநில அரசு அதிகாரிகள் மற்றும் காப்பீட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியது.

அதன் ஒரு பகுதியாக, விழிப்புணர்வை ஏற்படுத்த, முதற்கட்டமாக தமிழகத்தில் ராமநாதபுரம், மதுரை, கடலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

மேலும், தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 100 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு காப்பீடு குறித்த வினாடி - வினா போட்டி நடத்தப்பட உள்ளது. பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிர் காப்பீட்டு வாரமும் கடைப் பிடிக்கப்படும். சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அனுஜ் தியாகி கூறினார். இச்சந்திப்பின் போது, எச்எடிஎஃப்சி வங்கியின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா பிரிவின் தலைவர் சஞ்ஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x