Published : 06 Jul 2014 03:43 PM
Last Updated : 06 Jul 2014 03:43 PM

வணிக நூலகம்: கடவுள் வாங்கலயோ கடவுள்.. கடவுள்..!

மேக்ஸ் வெபர் எனும் சமூகவியல் மேதை “அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட ஏற்பட உலகில் கடவுள் நம்பிக்கை பெருமளவு குறையும்” என்றார். மாறாக கடவுள் நம்பிக்கையும் அதைச் சார்ந்த வாழ்வியல், வியாபாரக் கூறுகளும் அதிகரித்துள்ளன என்கிறார் அம்பி பரமேஸ்வரன்.

For God’s Sake An Adman on the business of religion என்ற அவரின் புத்தகம் இதை ரசமாய் படம் போட்டுக் காட்டுகிறது. நுகர்வோர் உளவியல் பற்றி இந்திய ஆசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறைவு. அதிலும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு அனுபவஸ்தர் எழுதியுள்ளதால் இரண்டாம் சிந்தனை இல்லாமல் உடனே வாங்கினேன்.

தன் 35 வருட விளம்பர உலக அனுபவத்தின் மூலமாக இந்திய வியாபார நிறுவனங்களையும், இந்திய நுகர்வோர்களையும் சுவாரசியமாக அலசுகிறார். ஒரு பக்கம் கூட அலுப்புத் தட்டாத அளவிற்கு, ஒரு நாவல் படிக்கும் மன நிலைக்கு வாசகனைத் தள்ளி கடைசி வரை தன் வசம் வைத்திருக்கும் இவரின் அபார நடை குறிப்பிடத்தக்கது.

தன் பி.ஹெச்.டிக்காக திரட்டிய விஷயங்களைப் புத்தகமாக்கியதால், வெறும் அபிப்பிராயங்களாக இல்லாமல் புள்ளிவிவரக் குறிப்பும், ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்கள் என்பதால் ஒரு நம்பகத்தன்மை தெரிகிறது.

ஆதாரச் செய்தி ஒன்றுதான். இந்தியன் ஒரு பக்கம் நவீனம் ஆக ஆக இன்னொரு பக்கம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை முன்பை விட தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளான். இந்த முரண்பாடான வளர்ச்சி ஒரு சந்தை வாய்ப்பு. இதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்

எவ்வளவு பெரிய வண்டி வாங்கினாலும் பிள்ளையார் கோயில் முன் பூஜை உண்டு. ஸ்கிரீன் சேவர்களிலும் அதிகமுள்ள கடவுளும் விநாயகர்தான்!

திருப்பதி பாலாஜிதான் இந்திய கடவுள்களில் வசூல் ராஜா. அடுத்து வைஷ்ணவோ தேவி. பின் சபரி மலை. எல்லா கோயில் பிரசாதங்களையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதிகளும் வந்துள்ளன. திருப்பதியில் வழிக்கப்படும் தலை முடி அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் “விக்” தயாரிப்புக்கு விற்கப்படுகின்றன. அதுவும் ஈ- ஆக்சன் எனும் வலைதள ஏலத்தில் சென்ற ஆண்டு 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.

இது தவிர விசா பாலாஜி கோயில் என ஹைதராபாத் அருகில் ஒரு கோயில் உள்ளதாம். விசா கிடைக்க வேண்டினால் விசா உறுதி என அப்ளிகேஷனும் கையுமாக ஒரே கூட்டமாம்.

உலகிலேயே அதிக மக்கள் பங்கு கொள்ளும் மகா உற்சவம் கும்பமேளா. இதைப் பற்றி ஹார்வர்ட் நிர்வாகப் பள்ளி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதை முறைப்படுத்திச் செய்தால் எவ்வளவு சந்தைப்படுத்தலாம் என்று அதில் விளக்குகிறது. ஒரு நகரையே இதற்காக உருவாக்கிக் கலைக்கலாம் எனத் தெரிகிறது. ஹெலிகாப்டர் தர்ஷன் எல்லாம் வைக்கலாம் என டைரக்டர் ஷங்கர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார்கள்.

அக்ஷய திருதியை என்று யாரோ ஒரு புத்திசாலி நகைக்கடைக்காரர் கண்டுபிடிக்க அது மக்களை வரிசையில் நின்று தங்கம் வாங்க வைக்கிறது. அது போல விற்பனைக்கு மந்தமான ஆடி, மார்கழி மாதங்களில் ஆடித்தள்ளுபடி, மார்கழி இசை விழா எனத் தமிழர்கள் புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்கிறார்கள் என்கிறார்.

இந்தியாவின் 80% மதம், இந்து மதம் என்பதால் பெரும்பாலான விற்பனை உத்திகளும் இந்துக்களை நோக்கியுள்ளன என்கிறார் அம்பி. வீடுகளில் வாஸ்து, கல்யாணத்திற்கு முன் மணப்பொருத்தத்திற்கு ஜோதிடம், அசுப காரியங்கள் நடந்தால் ஹோமங்கள் என இந்து வணிகம் நடக்கிறது என்கிறார்.

அது போல நம் ஊரில் ஏன் சைக்கியாட்ரி பெரிதாக போணியாகவில்லை என்று அம்பி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. அவர்கள் வேலையை கார்பரேட் சாமியார்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதுபோல யோகா, ஆயுர்வேதா போன்றவையும் பக்தி சந்தையின் விரிவாக்கங்கள்தான்.

ஆனால் முஸ்லிம்களை இந்திய வணிகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கறுப்பு பர்தா அணியும் வங்கதேசத்தில்தான் பெண்களுக்கான நவ நாகரிக உடைகள் தயாரிக்கிறார்கள். அதை அவர்கள் உள்ளே அணிகிறார்கள்! அதுபோல பெண்களை அவர்கள் சமமாக நடத்துவதில்லை என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் ஆண்- பெண் விகிதம் இந்துக்களின் ஆண்- பெண் விகிதத்தை விட ஆரோக்கியமாக உள்ளது! 2050ல் உலகில் 50% ஜனத்தொகையை எட்டிப்பிடிக்கவிருக்கும் அவர்களை சரியாகப் புரிந்தால் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளது. Islamic Banking போன்ற விஷயங்கள் இந்தியாவில் பெருகலாம் என்கிறார் ஆசிரியர்.

புடவை, தாலி, திலகம் என அனைத்தும் டி.வி விளம்பரங்களில் வழக்கொழிந்து போனாலும் சீரியல்களில் அவை அனைத்தும் புத்துயிர் பெற்று ஜெகஜோதியாக வருவது யோசிக்க வைக்கும் விஷயம்.

பக்தி சார்ந்த படங்கள், சீரியல்கள், பத்திரிகைகள் என்றுமே தோற்றதில்லை. வெளியூர் செல்கையில் டிபனுக்கு நுழைந்தால் கல்லா ஆசாமி விபூதியும் ஊதுபத்தி வாசனையாக இருந்தால் “நல்ல ஓட்டல்” என நுழைகிறோம்.

பார்ஸி வைத்திருந்த கார் என்றால் நல்ல விலைக்குப் போகுமாம். முஸ்லிம்கள் என்றால் வீடு கொடுக்க மாட்டோம். கர்னாடக சங்கீதம் என்றால் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். நர்ஸ் என்றால் கேரள கிறித்துவ சேச்சிகள். வடக்கில் டேக்ஸி ஓட்டுனர்கள் என்றால் சிங்கை நம்பி ஏறுவோம்.

அது போல உச்ச கட்ட வியாபார சீஸன் ஹோலியா, விஷுவா, ரம்ஜானா, கிறிஸ்துமஸா, பொங்கலா, தீபாவளியா, கணேஷ சதுர்த்தியா என்பதை வாழும் மக்களிடம் மதம் சார்ந்த நம்பிக்கைகள் நிச்சயிக்கின்றன.

“ஆனால், வருங்காலத்தில் சாதி, மதப் பிரிவுகள் வேலையிடங்களில் பார்க்கமாட்டார்கள்; எல்லாம் மாறிவிடும்” என்ற இவர் கணிப்பு மட்டும் மணிரத்னம் படத்து கிளைமாக்ஸ் போல இடிக்கிறது.

நீங்கள் எந்த வியாபாரம் செய்தாலும் நம் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விற்பனை உத்திகளில் இணைப்பது முக்கியம்.

உதாரணத்திற்கு 2013 ஆய்வுப்படி, இந்தியாவின் திருமணச் சந்தை மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதில் உங்கள் தொழில் எவ்வளவு பைசா பார்க்கிறது?

கடவுள் தேவையில்லை என நாத்திகர்கள் சொல்லலாம். ஆனால் வியாபாரிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x