Published : 02 Aug 2023 02:19 PM
Last Updated : 02 Aug 2023 02:19 PM
புதுடெல்லி: பால் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சிலிடமிருந்து எந்தப் பரிந்துரையும் வரப்பெறவில்லை என்பதால் முழு வரிவிலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘பால் மற்றும் பால் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விபரங்கள் என்ன? சத்தான உணவுப் பொருட்களில் முக்கிய இடம்பிடித்துள்ள பால் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க திட்டம் இருக்கிறதா? பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டம் உள்ளதா?’ என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதில்: “கறந்த பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தயிர், மோர், லஸ்ஸி, பன்னீர் போன்றவை பாக்கெட்டில் அடைக்கப்படாமல், வணிக முத்திரை இல்லாமல் வேறு வடிவங்களில் விற்கப்பட்டால் அவற்றுக்கும் வரிவிலக்கு உண்டு. பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இந்தப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரிச்சலுகையும் அளிக்கப்படுகிறது. சுண்டிய பால், வெண்ணெய், நெய் பாலாடைக் கட்டி போன்றவற்றுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறைகள் நாடு முழுக்க ஒரே மாதிரி அமல்படுத்தப்படுகிறது.
அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படியே இந்த வரி விகிதங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பால் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தக் கவுன்சிலிடமிருந்து எந்தப் பரிந்துரையும் வரப்பெறவில்லை. எனவே, வரிவிலக்கு அளிக்க வாய்ப்பில்லை.
பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆனால் பால் பண்ணை தொழில் புரிவோருக்கு மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மூலம் சுமார் ஏழு திட்டங்களின் மூலம் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT