Published : 31 Jul 2023 06:35 AM
Last Updated : 31 Jul 2023 06:35 AM
சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 11 வயது சிஇஓ, பள்ளி படிப்பை தொடர தனது 12-வது பிறந்த நாளில் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்திரேவியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் சிறுமி பிக்சி குர்திஸ். 11 வயதான இவர், கரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டமான கடந்த 2021-ம் ஆண்டு தனது தாய் ராக்சி ஜாசென்கோவுடன் இணைந்து பிக்சி பிட்ஜெட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பிக்சி உள்ளார். குழந்தைகளுக்கான பொம்மைகளை உற்பத்தி செய்துவிற்பனை செய்யும் இந்நிறுவனத்தின் மாதாந்திர வருமானம் சுமார் ரூ.1.09 கோடியாக உள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனத்திலிருந்து விலகி படிப்பை கவனிக்குமாறு பிக்சிக்கு அவரது தாய் அறிவுரை கூறியுள்ளார். இதன்படி, பிக்சி தனது 12-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளார். அதன் பிறகு படிப்பில் முழு கவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பிக்சியை 1.3 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவர் அவ்வப்போது தனது ஆடம்பர வாழ்க்கை குறித்த வீடியோவை இதில் பகிர்வது வழக்கம்.
இதனிடையே, தனது பிறந்தநாளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு வழங்க உள்ள பரிசு தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்தபரிசு பையில் ரூ.4,000 மதிப்புள்ள அழகு சாதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசு பைகளை ஆஸ்திரேலியாவின் அழகு சாதன நிறுவனமான மெக்கோபியூட்டி வழங்கி உள்ளது. இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT