Published : 30 Jul 2023 05:20 AM
Last Updated : 30 Jul 2023 05:20 AM
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
ரஷ்யா அதன் சர்வதேச வர்த்தகத்துக்கு டாலரை பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது. மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையால், ரஷ்யா தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, பிற நாடுகளுக்கு குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது.
அச்சமயம், இந்தியா உலக சந்தையில் இருந்து, குறிப்பாக சவுதி, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிடமிருந்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 112 டாலருக்கு இறக்குமதி செய்து கொண்டிருந்தது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையால், ரஷ்யா தன் நாட்டு கச்சா எண்ணெய்யை ஒரு பேரல் 75 டாலருக்கு சலுகையில் வழங்கிய நிலையில், மோடி அரசு ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியது.
இந்த முடிவு பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை ஏறும். கச்சா எண்ணெய் விலை இறங்கும்போது இவற்றின் விலையும் இறங்கும் அல்லது விலையேற்றம் இருக்காது.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியாவில் விலைவாசி குறையும். இதனால் மக்கள் பலன் அடைவார்கள் என்று கூறி ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையை மீறி ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபட்டது.
இந்த நடவடிக்கையால், கடந்த ஒரு ஆண்டில் வழக்கத்தைவிட 15 மடங்கு அதிகமாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதனால் முதல் முறையாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்தது ரஷ்யா. இந்தியா வழங்கும் பணத்தை உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா பயன்படுத்தியது எனலாம்.
2022-ம் ஆண்டு பிப்ரவரியில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101. இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103. உக்ரைன் போர் தொடங்கும் முன், ஒரு லிட்ட டீசல் விலை ரூ.91. இன்று அது ரூ.94 ஆகும். போர் ஆரம்பிக்கும்போது, ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50-க்கும் கீழே. இன்று, அது ரூ.100-க்கும் மேலே.
மேற்கத்திய நாடுகளின் தடையை இந்தியா மீறி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மோடி அரசு சொல்லிய காரணம், அது இந்திய பொதுமக்களுக்கு உதவும் என்பதுதான். கடந்த ஒரு வருடமாக, அதிகமாக கச்சா எண்ணெய் மலிவு விலையில் வாங்கிய போதும், அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை; மாறாக விலைவாசி அதிகரித்துதான் இருக்கிறது.
பலன் அடைந்தது யார்?: காரணம் என்னவென்றால், மலிவு விலையில் வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் அரசு நிறுவனங்களுக்கு மட்டும் செல்லவில்லை. அதில் பாதி, ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது.
இந்த இரண்டு நிறுவனங்களும், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு அதிக விலையில் ஏற்றுமதி செய்து அதீத லாபம் ஈட்டியுள்ளன. போரில் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்படும்போது, அதை சாக்காக வைத்து, மோடி அரசு இரண்டு தனியார் நிறுவனங்கள் அதீத லாபம் சம்பாதிக்க உதவியுள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.44,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதனால்தான், மலிவு விலை கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பலன், சராசரி இந்திய குடும்பத்திற்கு கிட்டவில்லை. இதைவிட மோசமான மற்றொரு சிக்கல் இதில் இருக்கிறது.
பொதுவாக, வெளிநாடுகளுடன் இந்தியா வர்த்தகம் செய்யும்போது, அதற்கான பணப்பரிவர்த்தனை அமெரிக்க டாலரில் நடைபெறும். ஏனென்றால், உலக வர்த்தகத்தில் அதிகம் அங்கீகரிக்கப்படும் பணம் அமெரிக்க டாலர்தான். ஆனால், பொருளாதாரத் தடையால், ரஷ்யாவால் டாலரில் கட்டணம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக, ரஷ்யா தன் நாட்டு பணமான ரூபிளில் வர்த்தகம் மேற்கொள்ளும்படி சொல்லியது. ஆனால் ரூபிளின் மதிப்பு உலக சந்தையில் சரியாக கணிக்கப்படும் நிலையில் இல்லை. மேலும் ரூபிள் எளிதாக கிடைப்பதும் இல்லை. அதனால், இந்தியாவால் ரஷ்யாவுடன் ரூபிளில் வர்த்தகம் செய்ய முடியவில்லை. இந்திய ரூபாயில் வாங்கிக்கொள்ள ரஷ்யாவும் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், ரூபாயின் மதிப்பும் குறைவு மற்றும் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ரூபாய் மீது நம்பிக்கையும் குறைந்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனா ரஷ்யாவிடம் பேசி இந்தியாவிடமிருந்து தன் நாட்டுப் பணமான யுவானில் கட்டணம் பெற்றுக்கொள்ள ஒத்துக்கொள்ள வைத்தது. இதனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடம் வாங்கும் மலிவு விலை கச்சா எண்ணெய்க்கு, சீனாவின் பணமான யுவானில் ரஷ்யாவிற்கு கட்டணம் செலுத்தி வருகிறது.
சீனா நம் இந்திய நாட்டிற்கு எதிரி நாடு. லடாக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களிலும் நம் நாட்டிற்கு சொந்தமான நிலத்தை சீனா அபகரித்துள்ளது. சமீபத்திய மோதலில் நம் நாட்டின் 20 ராணுவ வீரர்களை சீன ராணுவம் கொன்றுள்ளது. இந்நிலையில், இந்தியா சீனாவின் பணமான யுவானை வர்த்தகத்திற்கு உபயோகித்தால், அது அமெரிக்க டாலருக்கு மாற்றாக யுவானை நிலைநிறுத்தச் செய்யும் சீனாவிற்குத்தான் உதவும். இது மோடி அரசு நம் நாட்டின் பாதுகாப்பை அடகு வைப்பது போன்ற செயல்பாடு.
மொத்தத்தில், இரண்டு தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக, மோடி அரசு நம் ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை மதிப்பிழக்க செய்துவிட்டதோடு, 25 கோடி இந்திய குடும்பங்களின் நலன்களையும் ஒதுக்கி வைத்து, உக்ரைனில் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிவிட்டது.
கட்டுரையாளர்
பொருளாதார நிபுணர்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT