Published : 03 Nov 2017 09:34 AM
Last Updated : 03 Nov 2017 09:34 AM

வணிக நூலகம்: கனவு – திட்டம் - சாதனை!

 

கி

ட்டத்தட்ட நம்மில் அனைவருமே நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கொண்டிருப்போம் அல்லவா!. இதில் எத்தனை பேர் கனவுகளுக்கான திட்டமிடல் மற்றும் அதன் மீதான செயல்பாட்டில் கவனம் செலுத்தி முன்னேறுகிறோம் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். சரியான விஷயங்களோடு கனவின் மீதான நமது செயல்பாடு அமையாவிட்டால், கனவு கனவாகவே போய்விடுமே தவிர அது நனவாவதற்கான வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.

சுவையாக சமைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? அதற்கான செயலில் ஈடுபட்டு, தேவையான பொருட்களை சேகரித்து, சரிவர சமையலில் கலந்து சமைக்கப்படும்போது மட்டுமே, நேர்த்தியான உணவு நமக்குக் கிடைக்கும். நமது கனவுகளுக்கான தனிப்பட்ட திட்டம், எதிர்வரும் தடைகளை தகர்த்தெறிவதற்கான வழி, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் பாதையில் செயல்படத் தேவையான அணுகுமுறை ஆகியவற்றைப்பற்றி சொல்கிறது “அர்ஃபீன் கான்” அவர்களால் எழுதப்பட்ட “வேர் வில் யு பி இன் ஃபைவ் இயர்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

வாழ்க்கைக்கான வடிவமைப்பு!

நாம் விரும்பிய நமது வாழ்க்கையை நம்மால் வடிவமைக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், நம்மைத் தவிர வேறு யாரால் நமக்கான சிறந்த வாழ்க்கையை வடிவமைத்திட முடியும் என்ற எண்ணம் வேண்டும். நாம் அதிர்ஷ்டத்தை நம்புகிறோமோ இல்லையோ, அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. நாம் நம்மை நம்புகிறோமா என்பதே முக்கியம். மேலும், நாம் விரும்பிய நமது எதிர்காலத்தை நம்மிடமுள்ள ஆற்றலால் பெறமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

இன்றைய நாளே நமது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், எதிர்காலத்தில் நம்மால் சிறப்பாக செயல்பட முடியாது. நிகழ்காலத்தில் முறையான செயல்பாடு இல்லாமல் அதனை வீணடிப்பவர்கள், அவர்களது எதிர்காலத்தையும் சேர்த்தே இழக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். இவ்வித எண்ணங்களே நமது வாழ்க்கையின் வடிவமைப்பிற்கான அடிப்படை காரணிகள்.

திறமை மட்டும் போதுமா?

மலையேற்ற வீரர் ஒருவர் அதீத திறமையுடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த திறமை ஒன்றே அவரை வெற்றியாளராக பறைசாற்றிவிடுமா?. அல்லது முறையான திட்டம் மற்றும் பயிற்சிகளின் மூலமாக தனது இலக்கை அடைந்தபின் வெற்றியாளராக அறியப்படுவாரா?. கண்டிப்பாக, வெறும் திறமை மட்டுமே வெற்றிக்கான காரணி அல்ல. திறமையானது செயல்பாடாக மாற்றம்பெற்று, முறையான பயிற்சியின் மூலமாக செயல்பாட்டு நிலைக்கு வந்தால் மட்டுமே வெற்றி நம் வசம். விளையாட்டு வீரர், நடிகர், ஓவியர், பாடகர், இசையமைப்பாளர், மருத்துவர், விற்பனையாளர், பொறியாளர், ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் விவசாயி என எந்த துறையை சார்ந்தவராயினும் திட்டமும் பயிற்சியும் இல்லாத திறமையால் எவ்வித பயனும் இல்லை.

ஐந்தாண்டு திட்டம்!

திட்டம் என்றவுடன் அதற்கான காலவரம்பு ஒன்றை நிர்ணையிப்பது அவசியமாகிறது. இதற்காக ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஐந்து ஆண்டுகள். அது ஏன் ஐந்து ஆண்டுகள்? மூன்று ஆண்டுகளாக இருக்கக்கூடாதா? என்றால், அதற்கான விளக்கமும் உதாரணங்களும் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என்பது கணிசமான வெற்றியைப் பெறுவதற்கு குறைந்த கால அளவாகப் பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் சிறிய அளவிலான வெற்றிகளைப் பெறமுடியுமே தவிர, நிலையான பெரிய மாற்றங்களுக்கு ஐந்தாண்டு கால அளவு என்பது அவசியமாகிறது.

பெரும்பாலான கல்வி பாடத்திட்டங்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கானதாகவே உள்ளன. அதுபோலவே, பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளே. பல நாடுகள் தங்களின் குறிப்பிட்ட இலக்கிற்கான ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆக, ஐந்தாண்டுகள் என்பது நம் இலக்கினை அடைவதற்கான யதார்த்தமான நடைமுறை கால அளவே.

தேர்வுகளே காரணம்!

காலை உணவிற்கு எதை எடுத்துக்கொள்ளலாம், பிரட் அல்லது பழங்கள்?. எங்கு உடற்பயிற்சி செய்வது, வீடு அல்லது ஜிம்?. எதை படிக்கலாம், புத்தகம் அல்லது நாளிதழ்?. எதில் பயணம் செய்யலாம், பஸ் அல்லது கார்?. விடுமுறைக்கு எங்கு செல்லலாம், ரிசார்ட் அல்லது கோயில் என அனைத்திலும் நமக்கான தேர்வு உள்ளது. நமது வாழ்க்கை மற்றும் நாம் யார் என்பதை நமது தேர்வுகளே வரையறுக்கின்றன, இல்லையா?.

நமது பணி, நண்பர்கள், வாழ்க்கைத்துணை, உடை என ஒவ்வொன்றிலும் நமக்கான சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முயலும் நாம், நமது கொள்கை, திட்டம், எண்ணங்கள், நம்பிக்கைகள், சமூகப்பார்வை மற்றும் கலாசாரம் என இவற்றிலும் சரியான தேர்வுகளை மேற்கொள்ளும்போது நமது வாழ்க்கை மிகச்சிறப்பாக வடிவமைக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

பட்டியலிடுங்கள்!

வடிவமைப்பு, திட்டம், நமது தேர்வுகள் எல்லாம் சரிதானுங்கோ!, இதை எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று கேட்கிறீர்களா?. நம் வாழ்க்கையில் நாம் அடையவேண்டிய இலக்குகளுக்கான பட்டியல் ஒன்றினை முதலில் தயாரியுங்கள். இதுவே வாழ்க்கையின் மீதான தெளிவு மற்றும் கவனத்தை நமக்கு ஏற்படுத்தும். இது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் அல்ல. தினசரி பணிகளை வகைப்படுத்தும்போது, சூப்பர்மார்க்கெட் செல்லும்போது, நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பும்போது என அன்றாடம் நம்மால் செய்யப்படும் செயல்பாடே. இந்த சிறு சிறு நிகழ்வுகளுக்கான பட்டியல் தயாரிப்பு போன்றே, வாழ்க்கையின் பெரும் இலக்குகளுக்கான பட்டியலும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம்.

மொத்த சம்பாத்தியத்தில் இத்தனை சதவீதம் சேமிக்க வேண்டும், குறைந்தது வாரத்திற்கு ஐந்து நாட்களாவது ஜிம்மிற்கு செல்லவேண்டும், செய்யும் வேலையை விட்டுவிட்டு சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்கவேண்டும், ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட வருடங்களுக்குள் சொந்தமாக வீடு வாங்கவேண்டும், குடும்பத்துடன் ஒரு நீண்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவேண்டும் போன்ற நம் வாழ்க்கை முறைக்கு தகுந்த ஒவ்வொருவருக்குமான இலக்குகளை பட்டியலிடவேண்டும். மேலும், பட்டியலிடல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கான முக்கியத்துவம் அதை வரிசைப்படுத்தி செயல்படுத்துதலிலும் உண்டு. குறிப்பிட்ட இலக்கிற்கான கால அளவு, அதற்கான நடவடிக்கைகள், இடர்பாடுகள் மீதான செயல்பாடு மற்றும் செய்யவேண்டிய மாற்றங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்னும் பிற!

இவையெல்லாம் தவிர, இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகள், மாற்றத்திற்கான தினசரி மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள், வெற்றியை தீர்மானிக்கும் செயல்பாடுகள், கவனத்துடன் கூடிய அணுகுமுறைகள், பயத்தை ஊக்கசக்தியாக பயன்படுத்தும் கலை, அர்ப்பணிப்பு, ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் காலநேரத்தின் மதிப்பு என ஆசிரியர் தொடாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, வாழ்க்கை வெற்றிக்கான அனைத்தும் இந்தப் புத்தகத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.

சரியான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை என்ற எண்ணத்தை உதறித்தள்ளி, ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நமக்கான சரியான சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்டு செயலாற்றுவதன்மூலம் எதிர்காலத்தை எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ள முடியும்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x