Published : 25 Jul 2023 11:00 PM
Last Updated : 25 Jul 2023 11:00 PM

மே 19 முதல் ஜூன் 30 வரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 136.13 கோடி ரூ.2000 நோட்டுகள் வாபஸ்

புதுடெல்லி: மே 19 முதல் ஜூன் 30 வரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 136.13 கோடி ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 24 (1)-ன் கீழ் 2016ம் ஆண்டு நவம்பர் 10 அன்று 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த அனைத்து ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற பின்னர் கரன்சி தேவையை விரைவாக பூர்த்தி செய்வதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 19ம் தேதி இந்த 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் மார்ச் 2017 க்கு முன்னர் வெளியிடப்பட்டதாகவும், அவற்றின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ரிசர்வ் வங்கி நடத்திய இந்திய அளவிலான ஆய்வின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.

மேலும், பொதுமக்களின் கரன்சித் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற மதிப்புகளில் உள்ள ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், ரிசர்வ் வங்கியின் தூய கரன்சி நோட்டுகள் கொள்கைக்கு இணங்கவும், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ரிசர்வ் வங்கியின் தகவல்படி 2017-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,57,063 கோடி ரூபாய் மதிப்பிலான 329 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,62,220 கோடி ரூபாய் மதிப்பிலான 181 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

2023 மே 19 நிலவரப்படி 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 177.93 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023 மே 19 முதல், 2023 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 136.13 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன." இவ்வ்வர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x