Published : 25 Jul 2023 12:53 PM
Last Updated : 25 Jul 2023 12:53 PM
லண்டன்: கூகுள் நிறுவனத்தில் சுமார் 13 ஆண்டு காலம் வேலை பார்த்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் கூகுளின் செய்திப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் Gardening விடுப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் ஊழியர்கள் வேலை செய்யும் இடத்துக்கு வர வேண்டியதில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் பணி நீக்க நடவடிக்கைக்கு அவர் ஆளாகியுள்ளார். இது குறித்து லிங்க்ட்இன் தளத்தில் பதிவு ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2010-ல் கூகுளுடன் அவரது பயணம் தொடங்கியுள்ளது.
“கூகுள் நிறுவனத்துடன் 13 ஆண்டு காலம் இணைந்து பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த காலத்தில் என்னால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் மன நிறைவை தருகின்றன. டிஜிட்டல் நியூஸ் இனிஷியேட்டிவ், ஜர்னலிசம் எமர்ஜென்சி ரிலிஃப் ஃபண்ட் போன்றவையும் இதில் அடங்கும். இது அனைத்தும் சக ஊழியர்களின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை.
கொஞ்சம் ஓய்வு, இந்தியாவில் உள்ள அம்மாவை பார்ப்பது போன்றவற்றை செய்த பிறகு 2024-ம் ஆண்டை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் முதல் அடுத்து என்ன செய்வது என்பதை திட்டமிட உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்னர் பிபிசி செய்தி நிறுவனத்தில் 9 ஆண்டுகள் அவர் பணியாற்றி உள்ளார். டெக்சாஸ் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் அவர் இளங்கலை முடித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் கடந்த ஜனவரியில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் உலகளவில் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT