Published : 25 Jul 2023 05:55 AM
Last Updated : 25 Jul 2023 05:55 AM
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.261.23 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இவ்வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது.
தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தற்போது நாடு முழுவதும் 536 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
2023- 2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.84,300 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.47,008 கோடியை அடைந்துள்ளது. கடன்களின் மொத்தத் தொகை ரூ.37,292 கோடி என்ற நிலையில் உள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு ரூ.7,190 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.5,427 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ரூ.261.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.234.21 கோடியாக இருந்தது. நிகர லாபம் 11.54 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
கடன்களின் மூலம் வட்டி வருவாய் ரூ.1,002 கோடியில் இருந்து ரூ.1,156 கோடியாகவும், இதர வருவாய் ரூ.140 கோடியில் இருந்து ரூ.167 கோடியாகவும் அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.56 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.93 சதவீதத்தில் இருந்து 0.66 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இவ்வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.381-ல் இருந்து ரூ.454 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி முன்னுரிமை துறைகளுக்கு ரூ.27,805 கோடி கடன் வழங்கியுள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 40 சதவீதம் என்ற இலக்கைத் தாண்டி, 75 சதவீதம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாய துறைக்கு ரூ.12,231 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்த கடனில் 18 சதவீதம் மட்டுமே வழங்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் 32.80 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ஆய்வு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை எதையும் நடத்தவில்லை. சில கணக்குகள் தொடர்பாக சரிபார்ப்பு பணிகளை மட்டுமே செய்தனர். அப்போது வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் முழுமையாக களையப்பட்டு, அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன், பொதுமேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணை பொதுமேலாளர் அசோக்குமார், தலைமை மேலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT