Published : 17 Nov 2017 10:20 AM
Last Updated : 17 Nov 2017 10:20 AM

வணிக நூலகம்: படிக்கும் வித்தை அறிவோம்!

தை படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதில் படிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் பல வழிகளிலும் நமக்கு கிடைக்கவே செய்கின்றன. ஒரு நல்ல நாவல் அல்லது சிறுகதை தொகுப்பு, வீட்டுத் தோட்டம் அல்லது மொட்டைமாடியில் அமர்ந்து படிக்கலாம், அச்சிடப்பட்ட புத்தகம் அல்லது டிஜிட்டல் புத்தகம் என பலதரப்பட்ட பதில்கள் மேற்கண்ட கேள்விகளுக்கு கிடைக்கும் அல்லவா!. இவற்றையெல்லாம்விட, எப்படி படிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வதே சிறந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஒரு கதையோ அல்லது கட்டுரையோ அல்லது கவிதையோ எதுவாயினும், அதை ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் படிக்கும்போது மட்டுமே, அது நம் மனதில் நிலைத்து நிற்கும். கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிப்பதற்கான வழிமுறைகளையும், யுக்திகளையும் செல்கிறது “ரான் ஃபிரை” என்பவரால் எழுதப்பட்ட “ஹவ் டு ஸ்டடி” என்னும் இந்தப் புத்தகம். படிப்பதற்கு மட்டுமின்றி, சரியான புரிதலுக்கும், நீடித்த நினைவிற்குமான குறிப்புகளையும் ஆலோசனைகளையும் கொடுத்திருப்பது சிறப்பு.

முதலில் பள்ளி மாணவர்களுக்காக இந்தப் புத்தகத்தை எழுதியதாகவும், பிறகு மெல்ல மெல்ல அதிகப்படியான மற்ற வாசகர்களையும் இப்புத்தகம் கவர்ந்ததாகவும் சொல்கிறார் ஆசிரியர். அதிலும் அதிக எண்ணிக்கையிலானோர் பெற்றோர்கள்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். வெறுமனே படிப்பதற்கான நுணுக்கங்களை மட்டும் சொல்லாமல், ஒருவரின் தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துகொள்வற்கான சில எளிய சோதனைகளையும், அவற்றிற்கான மதிப்பீடுகளையும் கொடுத்திருப்பது அதிக பயனளிக்கக்கூடியது.

பழக்கத்தை உருவாக்குதல்!

நமக்கு சரிவராத அல்லது நமது வாசிப்பு பழக்கத்திற்கு இடையூறு செய்யக்கூடிய விஷயங்களை வெறுமனே நிறுத்திவிடுவதைவிட, நமக்கு ஏற்புடைய மற்றும் வாசிப்பிற்கு இணக்கமான மற்றொரு பழக்கத்தை அதற்கு மாற்றாக ஏற்படுத்திக்கொள்வது சிறந்ததாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். இது செயல்படுத்துவதற்கு எளிதானது மட்டுமல்ல, சிறப்பான பலனைக் கொடுக்கக்கூடியதும் ஆகும். பழக்கம் என்ற என்ஜினிற்கான ஆயில் போன்றது பயிற்சி. ஆம், பயிற்சியற்ற எதுவும் பலம்பெற்றுவிட முடியாது. தொடர்ச்சியான தினசரி பயிற்சிகளின் மூலமாக இப்பழக்கத்தை மெருகேற்றி பயன்பெற முடியும். அடுத்தபடியாக, இன்றைய வாசிப்புகள், இந்த வாரத்திற்கான வாசிப்புகள் என நமக்கு நாமே ஒரு பட்டியலை தயார்செய்து, பழக்கத்தின் மீதான சீரான கண்காணிப்பையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரியாகப் பயன்படுத்துவோம்!

நமது பிஸியான தினசரி பணிகளுக்கு இடையே கிடைக்கும் சிறு சிறு நேரங்களையும் படிப்பதற்கு பயன்படுத்தலாம் என்கிறார் ஆசிரியர். வரிசையில் காத்திருக்கையில், நண்பருக்காக காத்திருக்கையில், உணவு இடைவேளை என ஏதோ ஒரு வழியில் நமக்கு தினமும் சிறிது நேரம் கிடைக்கவே செய்கிறது அல்லவா!. நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம் அல்லது ஒரு பத்திரிகை கட்டுரை என ஏதேனும் ஒன்றை எப்போதும் உங்களுடனேயே எடுத்துச்செல்லுங்கள். உங்களுக்கு நாள் முழுவதும் ட்ரைவிங் வேலையா? அப்படியானால் ஆடியோ புத்தகம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர். கிடைக்கும் நேரத்தை விரயமாக்காமல் பயனுள்ள வழியில் படிப்பதற்கு உபயோகப்படுத்தி பயன்பெறலாம் என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

வாசிப்பின் நோக்கம்!

ஒரு செயலை செய்வதற்கு தீர்மானிக்கிறோம் என்றால், அதன் நோக்கத்தையும் சரியாக வரையறுத்திருப்போம் அல்லவா!. இது நமது வாசிப்பிற்கும் பொருத்தமானதே. ஆம், ஒன்றை படிக்கிறோம் என்றால் அதற்கான நோக்கமும் வேண்டும். நோக்கமற்ற வாசிப்பு வீணான செயல் என்கிறார் ஆசிரியர். எதை படித்தாலும் அதில் சில விஷயங்களையாவது கிரகித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக அதிலுள்ள முக்கியமான தகவல்களை கண்டறிய வேண்டியது அவசியம். அதிலும் விடை காணவேண்டிய கேள்விகளையும் விஷயங்களையும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக படித்த விஷயங்களை தகுந்த மதிப்பீடு செய்யவேண்டும். பிறகு, அதனை நமக்கு தோதான தருணங்களில் உபயோகிக்க முயற்சிக்க வேண்டும். இவற்றில் எதுவுமே பொருந்தவில்லையா? அப்படியானால் நாம் படிக்கின்ற தகவல்கள் குறைந்தபட்சம் நல்ல பொழுதுபோக்கு அம்சமாகவாவது இருக்க வேண்டும்.

வாசிப்பின் வேகம்!

மிக வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ படிக்கும்போது, நாம் எதையும் உருப்படியாக புரிந்துகொள்வதில்லை என்கிறார் பிரெஞ்சு தத்துவஞானி “பிலைஸ் பாஸ்கல்”. வாசிப்பு என்பது ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல. வேகமாகப் படிப்பவரே நல்ல வாசிப்பாளர் என்று அர்த்தமும் அல்ல. ஆம், படிக்கின்ற வேகத்தைவிட, எந்த வேகத்தில் படிப்பது நமக்கு வசதியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதே சிறந்தது. தொடர்ந்து படிக்க படிக்க நமது வாசிப்பின் வேகம் இயற்கையாகவே அதிகரிக்கும். இதற்கான சில பரிந்துரைகளும் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வாசிப்பிற்கான நமது கவனத்தை ஒருமுகப்படுத்துதல் அவசியம். அடுத்ததாக கவனச்சிதறலை உருவாக்கக்கூடிய வெளிப்புற காரணிகளைக் கண்டறிந்து நீக்கவேண்டும். வாசிப்பிற்கான நமது ஆர்வத்தின் அளவினைக் கண்டறிதலும், படிக்கின்ற விஷயத்தின் மீதான மதிப்பீடும் முக்கியம். அடுத்ததாக முடிந்தவரையில் வசதியான மற்றும் அமைதியான சூழ்நிலையை படிப்பதற்கு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வாசிப்பிலுள்ள முக்கியமான மற்றும் தேவையான கருத்துகளை குறிப்பெடுத்துக்கொள்ள பழக வேண்டும். இது வாசிப்பிற்குப் பிறகான மறு ஆய்விற்கு பயன்படுவதாக இருக்கும். மேலும், வரிக்கு வரி புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஒட்டுமொத்த அடிப்படை கருத்தினை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஏதோ ஒரு நாள் நேரம் கிடைத்தது, படித்தோம் என்றில்லாமல், அடிக்கடி வாசிப்பிற்கான சூழலை உருவாக்கி தொடர்ந்து படிக்க வேண்டும்.

வாசிப்பிற்கான சூழல்!

நாம் விரும்பிய ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்க தீர்மானிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படித்துவிட முடியுமா என்றால், கண்டிப்பாக இல்லை. ஆம் எங்கு, எப்பொழுது மற்றும் எப்படி என்ற காரணிகள் வாசிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார் ஆசிரியர். நமக்கு இன்று கிடைக்கும் நேரத்தில் இதை வாசித்து முடித்துவிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு படிக்க வேண்டும். மாறாக இதை வார இறுதியில் படிக்கலாம் என்றால் அதற்கான திட்டமிடலும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். அதுபோலவே காலை, மாலை, இரவு என நமக்கு வசதியான நேரத்தினை வாசிப்பிற்கு அமைத்துக்கொள்ள வேண்டும்.

நம்மில் சிலருக்கு பின்னணியில் மெல்லிய இசையுடன் படிக்க பிடித்திருக்கலாம். சிலருக்கு படிப்பதைவிட கேட்பது வசதியாக இருக்கலாம். அவ்வாறானவர்கள் ஆடியோ புத்தகம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதுபோலவே வீடு, நூலகம், அலுவலகம், பயணம் போன்ற படிக்கின்ற இடம் நமக்கு வசதியானதாகவும், இரைச்சலற்றதாகவும் இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும். நாம் நினைத்ததை முழு திருப்திகரமாக வாசித்து முடித்துவிட்ட நிலையில், நமக்கு நாமே பாராட்டினை தெரிவித்துக்கொள்ள வேண்டும். இது நமது அடுத்த வாசிப்பிற்கான ஆர்வமான சூழலை நம்மிடம் உருவாக்கும்.

சரியான திட்டமிடலுடன் வாசிப்பினை தொடர்ந்து செயல்படுத்தும்போது, நாளடைவில் அது நமது தினசரி வழக்கமாகவே மாறி, நமது அறிவாற்றலை மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x