Published : 20 Jul 2023 04:16 AM
Last Updated : 20 Jul 2023 04:16 AM
சென்னை: வருமான வரித் துறையின் வரலாற்றில் முதல் முயற்சியாக `டிடிஎஸ் நண்பன்' (TDS Nanban) என்ற பெயரில், பல்வேறு விதிகள்,கட்டணங்கள், பணம் அனுப்புவதற்கான காலக்கெடு, அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தண்டனை விதிகள் போன்ற டிடிஎஸ் (TDS) தொடர்பான பிரத்யேகமான கேள்விகளுக்குப் பதில்களை வழங்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ‘சாட்பாட்’ (Chatbot)செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை வருமான வரி முன்னாள் தலைமை ஆணையர் எம்.ரத்தினசாமி முன்னிலையில், சென்னை வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா இதை அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலி பயனர்களுக்கு ஏற்ற வகையிலும், சுலபமாகப் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறை ஆகியவற்றுக்கு இடையே வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும்.
இச்செயலி டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கி அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கான சாட்பாட் செயலியை பிளே மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் www.tnincometax.gov.in இணையதளம் மூலமும் பதிவிறக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT