Published : 18 Jul 2023 12:58 PM
Last Updated : 18 Jul 2023 12:58 PM

“ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி” - கவுதம் அதானி காட்டம்

கவுதம் அதானி | கோப்புப்படம்

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை, "குறிவைத்து தொடுக்கப்பட்ட தவறான தகவல்களின் தாக்குதலும், மதிப்பற்ற குற்றச்சாட்டுகளின் கலவையும் ஆகும்" என்று அதானி குழுமங்களின் தலைவர் கவுதம் அதானி காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதானி குழுமங்களின் முதன்மையான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் 31-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கவுதம் அதானி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்திய வரலாற்றில் முதல் முறையாக மிகப் பெரிய அளவில் ஃபாலோ ஆன் பொதுப் பங்களிப்பை அளிக்க நாங்கள் திட்டமிட்டிருந்த போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குறுகிய விற்பனை ஆய்வு நிறுவனம், எங்களின் பங்குகளின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

அந்த குறிவைத்து தொடுக்கப்பட்ட தவறான தகவல்களின் தாக்குதல் மற்றும் மதிப்பற்ற குற்றச்சாடுகளின் கலவையாகவே இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை 2004-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுகளை சேர்ந்தவை. அவை அனைத்தும் அந்தக் காலகட்டத்திலேயே உரிய அதிகாரிகளால் தீர்க்கப்பட்டுவிட்டன. அந்த அறிக்கை எங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தீங்கிழைக்கும் முயற்சி" என்று பேசியிருந்தார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “தங்கள் நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானிகுழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டினை அதானி பல முறை மறுத்திருந்தார்.

இந்தநிலையில், அதானி குழுமம் மீதான இக்குற்றச்சாட்டு இந்தியாவில் பெரும் அரசியல புயலை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொடந்து வலியுறுத்தி வந்தன. மேலும், அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியின் தொடர் மவுனம் குறித்தும் கேள்விகள் எழுப்பின. இருவரும் ஒரே மாநிலத்தைச் (குஜராத்) சேர்ந்தவர்கள், நன்கு பரிச்சயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, பிரதமர் குறித்த குற்றச்சாட்டுக்களையும் மறுத்தது. இந்த விவகாரத்தை செபி அமைப்பும், உச்ச நீதிமன்றம் நியமத்தி நிபுணர்கள் குழுவும் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றன. இதற்கிடையில், ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி நிறுவனங்கள் நிகர மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தது. உலகப் பணக்காரர் பட்டியலிலும் சரிவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x