Published : 18 Jul 2023 10:43 AM
Last Updated : 18 Jul 2023 10:43 AM

2007 ஐபோன் 4ஜிபி ‘வின்டேஜ்’ மாடல் போன் ரூ.1.56 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

முதல் தலைமுறை ஐபோன் மாடலுடன் ஸ்டீவ் ஜாப்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2007-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் தலைமுறை ஐபோன் 4ஜிபி மாடல் போன் ரூ.1.56 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வின்டேஜ் மாடல் போன் அதன் அசல் விலையை காட்டிலும் 300 மடங்கு கூடுதலாக ஏலத்தில் விற்பனை ஆகியுள்ளது.

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு தனி வரவேற்பு இருப்பது உண்டு. அதன் வெளிப்பாடுதான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின் மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் நேரடி ஸ்டோர்களை திறந்தபோது அந்த அங்காடிகளுக்கு முன்பு திரளான மக்கள் வந்திருக்க காரணம். பயனர்களுக்கான பிரைவசி தொடங்கி, சங்கடமில்லாத பயன்பாடு வரையில் ஆப்பிள் போனின் பிளஸ்களை பட்டியலிட முடியும்.

விரைவில் ஐபோன் 15 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தச் சூழலில் கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த முதல் தலைமுறை ஐபோன் மாடலான ஐபோன் 4ஜிபி மாடல் ரூ.1.56 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

இந்த போன் கடந்த 2007 ஜூனில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் விலை 499 டாலர். இதனோடு 8ஜிபி மாடல் போனும் அறிமுகம் செய்யப்பட்டது. 8ஜிபி போனுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்க அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் ஐபோன் 4ஜிபி மாடல் விற்பனையை ஆப்பிள் நிறுத்தியுள்ளது. இருப்பினும் அதில் ஒரு போன், உற்பத்திக் கூடத்தில் இருந்து வந்த நிலையில் சீல் பிரிக்காமல் இருந்துள்ளது.

அந்த போனை தான் அமெரிக்க நாட்டில் இயங்கி வரும் எல்சிஜி எனும் ஏல நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த போன் 1 லட்சம் அமெரிக்க டாலர் வரை ஏலத்தில் வாங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. சுமார் 28 பேர் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். 10 ஆயிரம் டாலரில் ஏலம் தொடங்கியுள்ளது. 190,372.80 டாலருக்கு இந்த போன் ஏலம் போயுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.1.56 கோடியாகும்.

இதற்கு முன்னர் இதே மாடலில் வேறொரு போனை எல்சிஜி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 63,356 டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்திருந்தது. மற்றொரு ஏல நிறுவனம் இதே மாடல் போனை 40 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்திருந்தது. இந்த அரிதான போனுக்கு ஐபோன் சேகரிப்பாளர்கள் மத்தியில் நிலவும் ஆர்வம் தான் இதற்கு காரணம் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x