Last Updated : 11 Nov, 2017 04:03 PM

 

Published : 11 Nov 2017 04:03 PM
Last Updated : 11 Nov 2017 04:03 PM

ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: உணவு பொருள் விலை குறையுமா?

ஓட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள போதிலும், வாடிக்கையாளர்களுக்கு உரிய பயன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது; சில சொகுசு பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, உணவு பொருட்கள் மீதான அதிக ஜி.எஸ்.டி. வரியால் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எனவே ஓட்டல்கள், சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அமைச்சரவை குழு பரிந்துரைத்தது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர அனைத்து ஓட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டயக் கணக்காளர் ராஜேந்திர குமார் கூறியதாவது:

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வழங்கும் ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் ஓட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க தக்கது.

ஆனால், 5 சதவீத வரிக்கு இன்புட் கிரெடிட் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டல் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்கள் செலுத்தும் வரிக்கு சலுகை அறிவித்த மத்திய அரசு ஓட்டல் உரிமையாளர்களுக்கும் சலுகை வழங்க வேண்டும். ஓட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் பலவற்றிக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர்.

பேக்கிங் செய்யப்பட்ட காபி தூள், தானியங்கள், பிரண்டட் பொருட்களுக்கு கூடுதலான ஜிஎஸ்டி வரி செலுத்தி அவர்கள் பொருட்களை வாங்குகின்றனர். அவர்கள் விற்பனை செய்யும் உணவு பண்டங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்துள்ள நடவடிக்கை ஏற்க கூடியது.

ஆனால் அதற்குரிய இன்புட் கிரெடிட் சலுகையை ஓட்டல் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். இல்லை எனில் அவர்கள் செய்யும் செலவுக்காக உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவர்’’ எனக்கூறினார்.

இதுகுறித்த ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

‘‘சென்னை உட்பட பல நகரங்களில் சிறு சிறு ஓட்டல் நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரியை வசூலித்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தாங்களே அதை செலுத்தி வந்தனர். தற்போது வரி விகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்க தக்கது. இதன் மூலம் எங்கள் சுமை குறையும். அதேசமயம், அதற்குரிய இன்புட் கிரெடிட் சலுகையை தொடர்ந்து அளிக்க வேணடும். இல்லையெனில் வரிகுறைப்பால் எங்களுக்கு பயன் இல்லாமல் போய்விடும்’’ எனக்கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x