Published : 14 Jul 2023 04:57 PM
Last Updated : 14 Jul 2023 04:57 PM
கோவை: தொழில் துறை உட்பட பல்துறை வளர்ச்சியில் முக்கிய பங்களித்துவரும் கோவை விமான நிலையத்தில் விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. ஆண்டு தோறும் 25 லட்சத்து-க்கும் மேற்பட்ட பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சராசரியாக 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு பிரிவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனேஉள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒட்டு மொத்த கொங்கு நாட்டின் தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் கோவை விமான நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய சிறப்பு பெற்றுள்ள போதும் விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படாதது வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. விமான நிலையத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.
இன்று வரை நிலம் ஆர்ஜித பணிகள் முழுமையாக நிறைவடையாததால் விமான நிலையத்தில் ஓடுபாதை நீளத்தை அதிகரிக்கவும், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் முடியாத நிலை நீடிக்கிறது. கரோனா தொற்று பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தினர்.
நோய் தொற்று பரவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் விமான நிலைய வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தொற்று பரவல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து பெரும்பாலும் மீண்டுள்ள நிலையில், தற்போது தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 25 ஆகவும், ஆண்டுதோறும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.விரிவாக்கதிட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளதால், 90 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
விரைவில் நிலங்களை விமான நிலைய ஆணைய நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் உடனடியாக தொடங்கும். குறிப்பாக விமான ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்படும். இதனால் பெரிய ரக விமானங்களை எளிதாக கையாள முடியும்.
தவிர துபாய், மலேஷியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் விமான சேவையை விரிவு படுத்த வாய்ப்பு ஏற்படும். சரக்கு போக்குவரத்தும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும். சம்பந்தப் பட்ட துறையினர் துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT