Published : 13 Jul 2023 08:31 AM
Last Updated : 13 Jul 2023 08:31 AM
ஈரோடு: ஜி.எஸ்.டி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த அனுமதிப்பது, வணிகர்களை அச்சுறுத்தும் செயல், என தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற விக்கிரமராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜி.எஸ்.டி அமல்படுத்தப் பட்டபோது, வரி ஏய்ப்பு தடுக்கப்படும். அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு இதுவரை 12 முறை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், அரசுத்துறை அதிகாரிகளுக்கே ஜி.எஸ்.டி சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை. சாமானிய வணிகர்களை ஜி.எஸ்.டி துறை அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜி.எஸ்.டி குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தலாம் என்ற முடிவை அரசு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத் துறையை வணிகர்களிடையே நுழைய அனுமதித்தால், ஜி.எஸ்.டி சோதனை என்ற பெயரில், வணிகர்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். எனவே, ஜி.எஸ்.டி குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளிப்பதை வணிகர் சங்க பேரமைப்பு எதிர்க்கிறது. இது தொடர்பாக ஆலோசிக்க நாடு தழுவிய வணிகர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இம்மாத இறுதியில் டெல்லியில் நடக்கவுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் எங்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT