Published : 11 Jul 2023 06:01 AM
Last Updated : 11 Jul 2023 06:01 AM

பஜாஜ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 டிரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் - ரூ.2.23 லட்சம் விலையில் வாங்கலாம்

சென்னை: டிரையம்ப் நிறுவனத்தின் ‘ஸ்பீட் 400’ மற்றும் ‘ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ்’ ஆகிய மோட்டார் சைக்கிள்களின் உலகளாவிய வெளியீடு லண்டனில் ஏற்கெனவே நடைபெற்ற நிலையில், இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புனே, அகுர்டி வளாகத்தில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டிரையம்ப் ஸ்பீட் 400, ஸ்கிரம்பிளர் 400 எக்ஸ் ஆகிய வாகனங்கள் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் சாகென் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த பைக்குகள் நாடு முழுவதும் உள்ள டிரையம்ப் டீலர்களிடம் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளன. நடப்பு நிதியாண்டுக்குள் 80 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைத் திறக்க நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஸ்பீட் 400 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.33 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அறிமுக விலையாகமுதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.23 லட்சத்திலேயே இந்த பைக் கிடைக்கிறது. ஸ்க்ரம்பிளர் 400 எக்ஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரையம்ப் நிறுவன பைக்களை பெற வாடிக்கையாளர்கள் https://www.triumphmotorcyclesindia.com/booking என்ற இணையதளம் மூலம் ரூ.2 ஆயிரம் (திரும்பப் பெறக்கூடியது) முன்பணமாகச் செலுத்தி பதிவு செய்யலாம். ஷோரூம்கள் இன்னும் திறக்கப்படாத நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆர்வத்தைப் பதிவு செய்யலாம்.

ஸ்பீட் 400 பைக்குகள் இரு வண்ணக் கலவையில் வருகின்றன. கார்னிவல் சிகப்பு, காஸ்பியன்நீலம், பாந்தம் கருப்பு வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இரு வாகனங்களும் இங்கிலாந்தின் ஹின்க்ளியில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள இன்ஜின்கள் 6 வேக மாறுபாடு கொண்ட கியர் பாக்ஸ், 40பிஎஸ் பவர், 37.5 என்.எம். டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

மேலும் ஓட்டுநர்களுக்கு உகந்ததொழில்நுட்பத்துடன் 43 மி.மீ. ஃபோர்க், டிராக் ஷன் கன்ட்ரோல், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. 25 தேவையான உதிரிப்பாகங்களைப் பொருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 16 ஆயிரம் கிமீ சர்வீஸ் இடைவெளியில் 2 ஆண்டுகளுக்கு வரம்பற்ற மைலேஜ் உத்தரவாதம், 3 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆகியவையும் கிடைக்கும். பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x