Published : 11 Jul 2023 09:27 AM
Last Updated : 11 Jul 2023 09:27 AM
கோவை: மின் கட்டணம் அதிகரிப்பு, கழிவுப் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழகம் முழுவதும் நேற்று 400 ஓபன் எண்ட் (ஓ.இ) நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.
இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.20 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி ஓ.இ நூற்பாலைகளில் மேற்கொள்ளப் படுகிறது. மின் கட்டண உயர்வு மற்றும் கழிவுப் பஞ்சு விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் 400 ஓஇ நூற்பாலை கள் நேற்று முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மறு சுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்.டி.எப்) தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவுப்பஞ்சு, பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில்கள் மற்றும் பனியன் கட்டிங் வேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணி ஓ.இ நூற்பாலைகளில் மேற்கொள்ளப் படுகிறது.
நியாயமாக பார்த்தால் மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஜவுளி சங்கிலித் தொடரின் கீழ் உள்ள ஒரு துறை என்ற போதும் இதுவரை எவ்வித சிறப்பு திட்டங்களோ, சலுகைகளோ ‘ஓ.இ’ நூற்பாலைகள் துறைக்கு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 600 ஓஇ நூற்பாலைகளில் 400 நூற்பாலைகள் எல்டிசிடி என்ற பிரிவின்கீழ் மின்சாரத்தைப் பெற்று செயல்பட்டு வருகின்றன.
டிமாண்ட் கட்டணம், உச்சபட்ச நேர மின்கட்டணம் உள்ளிட்டவற்றால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் பிரதான பஞ்சு விலையில் 80 சதவீதம் அளவுக்கு கழிவுப் பஞ்சின் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. இப்பிரச்சினைகளால் கடந்த ஓராண்டாகவே ஓஇ நூற்பாலைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
பெரும்பாலான நூற்பாலை களில் 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இனிமேலும் நூற்பாலைகளை இயக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சில நூற்பாலைகள் ஜூலை 5-ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. நேற்று முதல் மேலும் 300 நூற்பாலைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மொத்தம் 400 ‘ஓஇ’ நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று ஒரே நாளில் ரூ.20 கோடி மதிப்பிலான நூல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் கட்டணத்தை குறைக்க தமிழக அரசும், கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓஸ்மா தலைவர் அருள்மொழி கூறும்போது, ‘‘மின்கட்டண உயர்வு தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் சென்னையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை ‘ஓஇ’ நூற்பாலை தொழில்துறையினர் நேரில் சந்தித்து பேச அனுமதி கிடைத்துள்ளது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT