Published : 09 Jul 2023 04:11 PM
Last Updated : 09 Jul 2023 04:11 PM

சூரியகாந்தி தோட்டங்களை நாடும் சுற்றுலா பயணிகள் - ‘செஃல்பி’ மோகத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்

கூடலூர்: தமிழக - கர்நாடக மாநில எல்லையில் விவசாயிகள் சூரிய காந்தி மலர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுப்பதால், சூரியகாந்தி தோட்டங்கள் சுற்றுலா தலங்களாக மாறியுள்ளன. இதன் மூலமும் விவசாயிகள் கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மசினகுடி, மாவனல்லா பகுதிகளில் குண்டுமல்லி, சூரியகாந்தி மலர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி, 120 நாட்களில் வளரும் வீரிய ஒட்டுப்பயிராகும். குறைந்த நீரில் வளர்ந்து அதிக மகசூல் தரக்கூடியது.

கூடலூர் - மைசூரு சாலையில் பந்திப்பூரை அடுத்து குண்டல்பேட் வரை, பல ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி பயிரிடப்பட்டுள்ளது. இவை தற்போது செழித்து வளர்ந்து நிற்கின்றன. தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம் முதல் கர்நாடகாவின் குண்டல்பேட் வரை கண்களை பறிக்கும் அழகுடன் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன,

இதனால், இந்த சாலை பல கிலோமீட்டர் தூரத்துக்கு மஞ்சள்மயமாக காட்சியளிக்கிறது. இந்த மலர்கள் ஆளுயரத்துக்கு நெடு நெடுவென வளர்ந்து, முதல்வன் படத்தில் வரும் பாடல் காட்சியை கண்முன்னே நிறுத்துகின்றன. சாலையோர தோட்டங்களில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களைக் கண்டு, அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி, சூரிய காந்தி மலர்களுக்கு மத்தியில் நின்றபடி செல்போனில் செஃல்பி எடுத்து மகிழ்கின்றனர். பலர் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளுவதால், சுற்றுலா பயணிகள் இந்த தோட்டங்களை நோக்கி படையெடுத்து, புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

தோட்டங்களில் சுற்றுலா பயணிகள் குவிவதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்ட விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி, செஃல்பி எடுப்பவர்களிடம் ரூ.50 கட்டணமாக வசூலிக்கின்றனர். செஃல்பிக்கு பணம் வசூலித்தாலும், சுற்றுலா பயணிகள் ஆர்வம் குறையாமல் பணம் கொடுத்து படம் எடுப்பதால், இந்த தோட்டங்களில் கூட்டம் களைகட்டுகிறது.

இதனால், தற்போது சூரியகாந்தி தோட்டங்கள் சிலவற்றில் சில்லறை கடைகளும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இந்த கடைகளில் தண்ணீர், பிஸ்கெட், சாக்லெட் மற்றும் பிற பொருட்களை விவசாயிகளே விற்பனை செய்கின்றனர். இந்த கடைகளால் இவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது, சூரிய காந்தி எண்ணெய்க்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ள விவசாயிகள், சுற்றுலா பயணிகளால் கூடுதல் வருவாய் கிடைப்பதால் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x