Published : 07 Jul 2023 04:30 AM
Last Updated : 07 Jul 2023 04:30 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.54 ஆயிரம் கோடி மூதலீடு செய்துள்ளதாகவும், தற்போது 1775 பெட்ரோல் நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு செயல் இயக்குநர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு புதிய திட்டங்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.54 ஆயிரம் கோடியை மூதலீடு செய்துள்ளது. இதில் முக்கியமாக நாகப்பட்டினத்தில் உள்ள நரிமணம் பகுதியில் ஒரு ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வகையில் ரூ.35,580 கோடியில் புதிதாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் காமராஜர் துறைமுகத்தில் ரூ.921 கோடியில் சமையல் எரிவாயு (எல்பிஜி)மெரைன் ஜெட்டி, ஆமுல்லைவாயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த லூபெஸ் வளாகம் ரூ.1,398 கோடியிலும், வல்லூர் மற்றும் ஆசனூரில்ரூ.1,190 கோடியில் புதிய முனையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ20 என்கிற 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல், தமிழகத்தில் 26 பெட்ரோல்நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
தொலைதூரம் செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்காக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோக நிலையங்கள் தமிழகத்தில் கோவை, மதுரை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்பட 6 இடங்களில் 3 மாதத்தில் தொடங்கப்படும். தற்போது மின்சார வாகனங்களுக்கான (இவி) சார்ஜிங் நிலையங்கள் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 300 நிலையங்கள் இந்தாண்டு இறுதிக்குள் நிறுவப்படும். அதேபோல் 1,775 புதிய பெட்ரோல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில் இவி-சார்ஜ் வசதியும் இடம்பெறும். இதுதவிர வணிக வளாகங்கள் போன்ற 20 பொது இடங்களிலும் இவி-சார்ஜ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவி சார்ஜில் ஒரு யூனிட்டுக்கு ரூ.24 பெறப்படுகிறது. வரும் காலத்தில் இது குறைக்கப்படலாம். இதற்காகவே இ20 என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வாகனங்களில் 20 சதவீதம் எத்தனால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எத்தனாலை பயன்படுத்தும்போது விலை குறையும். ஆனால் அதிகளவு எத்தனாலை பயன்படுத்த வேண்டுமானால், வாகனங்களை மேம்படுத்த வேண்டும்.
5 கிலோ சமையல் எரிவாயுகளை ரேஷன் கடைகளில் வழங்கவும் தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 800 பெட்ரோல் நிலையங்களிலும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்கப்படுகின்றன. சில இடங்களில் புதிதாக அடுப்புகளை வாங்கும் போது சிலிண்டர்களையும் உடன் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் 2833 9236 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (நிறுவன தொடர்பு) மூத்த பொது மேலாளர் வெற்றிசெல்வக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் தனபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT