Published : 30 Jun 2023 04:07 AM
Last Updated : 30 Jun 2023 04:07 AM
புதுடெல்லி: இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு மிகவும் மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், பால், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தன. மக்கள் அரசுக்கு எதிராக போராடினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார்.
இது குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகடா கூறியதாவது: இலங்கை அரசு கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. அப்போது, இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.32 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியது. இந்தியா இந்த உதவியைச் செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். குறிப்பாக, இந்தியா நிதியுதவி வழங்கியதால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நிதியுதவி இலங்கைக்கு கிடைத்தது.
இலங்கையின் ஒட்டுமொத்த கடன் ரூ.2.46 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன் மட்டும் ரூ.46 ஆயிரம் கோடி ஆகும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு மைனஸ் 7.8% ஆக குறைந்தது. இது இந்த ஆண்டில் மைனஸ் 2% ஆக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பொருளாதார கொள்கைகளில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT