கல்குவாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் கட்டுமான தொழில்கள் பாதிப்பு

கல்குவாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் கட்டுமான தொழில்கள் பாதிப்பு
Updated on
1 min read

கோவை: கல்குவாரிகள் வேலை நிறுத்தத்தால் கட்டுமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிரெடாய் கோவை கிளையின் தலைவர் குகன் இளங்கோ, செயலர் அரவிந்த்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரி சங்கத்தினர், சாலை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த சிறு குவாரிகளில் கனிமங்களை பயன்படுத்துவதற்கான விதி முறைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட், குவாரி துகள்கள் மற்றும் ரெடிமிக்ஸ் கான்கிரிட் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீடுகள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் கட்டுமான தொழிலுக்கு இது ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள மாநிலங்களுக்கு பெருமளவில் கொண்டு செல்லப்படும் கனிமங்களால் தமிழகத்துல் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குவாரி உரிமையாளர்கள் சங்கம், அரசை அணுகி விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in