Published : 26 Jun 2023 03:49 PM
Last Updated : 26 Jun 2023 03:49 PM

வேலைக்கு லஞ்சம் சர்ச்சை: குற்றச்சாட்டை மறுக்கும் டிசிஎஸ் நிர்வாகம் சொல்வது என்ன?

மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறை ஜாம்பவானான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் மீது ஊழியர்களைப் பணியமர்த்த லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மீது எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு தவறும் ஊழலும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மீதான அந்தக் குற்றச்சாட்டு தவறானது" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கே.கீர்த்திவாசனுக்கும், தலைமை நிர்வாக அதிகாரி என்.கணபதி சுப்ரமணியத்துக்கும் ஒரு புகார் அனுப்பப்பட்டது. அதில் மனிதவள மேலாண்மைக் குழிவின் சர்வதேச பிரிவு தலைவர் இ.எஸ்.சக்ரவர்த்தி பல ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணிக்கு ஆட்களை சேர்க்கும் ஸ்டாஃபிங் நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்களை பணியமர்த்தியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் ரூ.100 கோடி வரை பலரும் லஞ்சம் கைமாறியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் புகாரின் அடிப்படையில் உயர்மட்டத்தில் உள்ள 4 அதிகாரிகளை டிசிஎஸ் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்ததாகத் தகவல் வெளியானது.

புகாரைத் தொடர்ந்து டிசிஎஸ் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான அஜித் தலைமையில் 3 முக்கிய அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்புப் பிரிவின் தலைவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாகவும், ஆர்ஜிஎம் பிரிவைச் சேர்ந்த மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனங்கள் சிலவற்றுடனான ஒப்பந்தத்தை முறித்து அவர்களை ப்ளாக்லிஸ்ட் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மீது எழுந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு தவறும் ஊழலும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மீதான அந்தக் குற்றச்சாட்டு தவறானது. எங்கள் நிறுவனத்தின் நிர்வாகப் பதவியில் இருக்கும் எவரும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டதில்லை. ஒரு சில ஊழியர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாட்களை அளிக்கும் சில வியாபார நிறுவனங்களும் எங்களின் கோட்பாடுகளை அத்துமீறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x