Published : 21 Jun 2023 03:00 PM
Last Updated : 21 Jun 2023 03:00 PM
சென்னை: உலக அளவில் விமானப் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களில் டாப் 100 இடங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ‘விஸ்தாரா’ (Vistara) மற்றும் இண்டிகோ மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதனை ஸ்கைட்ராக்ஸ் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டாப் 100 பட்டியலில் விஸ்தாரா 16-வது இடத்திலும், இண்டிகோ 43-வது இடத்திலும் உள்ளன.
பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்கைட்ராக்ஸ். விமான நிறுவனங்களின் செயல்பாட்டை ரிவ்யூ செய்து தரவரிசை வழங்குகிறது இந்நிறுவனம். அந்த வகையில் ஸ்கைட்ராக்ஸ் 2023 விருதுக்கான தரவரிசையை தற்போது அறிவித்துள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் இது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த ஏர்லைன் கேபின் க்ரூ 2023 பட்டியலில் விஸ்தாரா 19-வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில் டாப் 10 இடங்களில் 8-வது இடத்தையும், உலக அளவில் 16-வது இடத்தையும் இந்நிறுவனம் பிடித்துள்ளது.
இதோடு இந்தியா மற்றும் தெற்காசியாவில் உள்ள சிறந்த விமான நிறுவனம், இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த ஊழியர்களை கொண்டுள்ள விமான நிறுவனம், இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த பிசினஸ் கிளாஸ் விமான நிறுவனம், உலகின் சிறந்த இன்ஃப்ளைட் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விமான நிறுவனங்களில் 20-வது இடத்தையும் விஸ்தாரா பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் கடந்த மே வரையில் நூறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20.23 மில்லியன் பயணிகள் இதில் வாக்களித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமான லிமிடெட் நிறுவனம் இணைந்து விஸ்தாரா நிறுவனத்தை நடத்தி வருகின்றன.
விஸ்தாரா நிறுவனம் தற்போது மொத்தமாக 61 விமானங்களை இயக்கி வருகிறது. 46 ஏர்பஸ் ஏ320நியோ, 10 ஏர்பஸ் ஏ321, ஒரு போயிங் 737-800என்ஜி மற்றும் நான்கு போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்கள் இதில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT