Published : 20 Jun 2023 07:11 AM
Last Updated : 20 Jun 2023 07:11 AM

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ரூ.24,500 கோடிக்கு 31 அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன ஆயுதமேந்திய எம்க்யூ- 9பி ட்ரோன்களை வாங்க கடந்த வாரம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா முதற்கட்டமாக இந்தியாவுக்கு ஆயுதமில்லாமல் 10 ட்ரோன்கள் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 மே மாதம் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா அதன் ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. எல்லை தொடர்பாக இன்னும் இரு நாடுகளிடையே மோதல் தொடர்ந்தபடி உள்ளது.

இந்நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. கடற்பரப்பு, வான்பரப்பு, நிலப்பரப்பு என அனைத்துத் தளங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து எம்க்யூ - 9 பி எனும் அதிநவீன ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்க்யூ - 9 பி ட்ரோன்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாளை முதல் (21-ம் தேதி) நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்தப் பயணத்தில், இந்தியா - அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிடமிருந்து ட்ரோன்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும்பட்சத்தில், முதற்கட்டமாக 10 ட்ரோன்கள் ஆயுதமில்லாமல் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 31 ட்ரோன்களில் 15 ட்ரோன்கள் கடல் பரப்பைக் கண்காணிக்கவும், 16 ட்ரோன்கள் நிலப்பரப்பைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x