Published : 24 Jul 2014 10:00 AM
Last Updated : 24 Jul 2014 10:00 AM

நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

சென்றவாரம் கண்டதன் தொடர்ச்சியாக இவ்வாரமும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் காண்போம்.

விலை நிர்ணயம்

பொருட்களின் அல்லது சேவையின் விலையை நிர்ணயிப்பது புதிதாக தொழிலை ஆரம்பிப்பவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு சவாலான விஷயம்தான். உதாரணத்துக்கு நீங்கள் சமீபத்தில் படித்து முடித்து கன்சல்டிங்கை ஆரம்பித்து இருக்கும் டாக்டர் என எடுத்துக்கொள்வோம். சென்னை போன்ற நகரங்களில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் ஒரு ஆலோசனைக்கு ரூ.500 வாங்குகிறார்கள். அதே சமயத்தில் MBBS முடித்த டாக்டர்கள் ரூ.200 அல்லது ரூ.250 வாங்குகிறார்கள். இவர்களெல்லாம் தொழிலில் நெடுநாட்களாக இருந்து காலூன்றி இருப்பவர்கள்.

இப்பொழுது நீங்கள் புதிதாக தொழிலை ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அவர்களோடு ஒப்பிட்டு நீங்கள் கட்டணம் வாங்க முடியாது. ஆகவே உங்களது கட்டணத்தை ஆரம்ப காலத்தில் குறைப்பது தான் ஒரே வழி. நீங்கள் ஒரு ஆலோசனைக்கு ரூ.100 அல்லது ரூ. 150-ஐ ஆரம்ப காலத்தில் வாங்கலாம். பிறகு உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் பொழுது அல்லது சில ஆண்டுகள் கழித்து சந்தையில் உள்ள கட்டணத்திற்கு ஈடாக வாங்கலாம்.

தொழில் ஆரம்பிக்கும் காலத்தில் உங்களிடம் வாடிக்கையாளர்களை வரவழைப்பதற்கு நீங்கள் இனாமாகக் கூட ஆலோசனை தர வேண்டியிருக்கும். உங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் நுட்பம், நேர்த்தி போன்றவை அதிகரிக்கும் பொழுது நீங்கள் சந்தையை விட சற்று அதிகமாகக் கூட கட்டணத்தை வசூலிக்கலாம்.

இதுபோலத்தான் பிற தொழில்களிலும் நீங்கள் உங்களின் ஆரம்ப கால விலை யுக்தியை கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்கள் வந்து உங்களை பரிசோதித்து பார்ப்பதற்கு, நீங்கள் குறைந்த விலையில் அவர்களுக்கு வாய்ப்பைத் தர வேண்டும்.

நீங்கள் ஆரம்பிக்கப்போகும் தொழில் பழைய தொழில்தான் என்ற பொழுதிலும், அத்தொழிலில் உங்களின் விலையை நிர்ணயிக்க சில காலங்கள் ஆகிவிடும். இது அனைத்து ரகமான தொழில்களுக்கும் உண்மை. ஆகவே டிரையல் அண்ட் எரர் முறையில்தான் நீங்கள் உங்கள் விலையை நிர்ணயிக்க வேண்டி வரும்.

அனைத்து வேலைகளையும் செய்ய முயல்வது

ஸ்டார்ட்-அப்-கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் தொழிலை ஆரம்பித்தவர் தானே அனைத்து வேலைகளையும் செய்ய முயலுவார். ஆரம்ப காலத்தில் ஒருவரே பல வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கும் என்றாலும், காலம் செல்லச் செல்ல உங்களின் வியாபாரம் பெருகப் பெருக நீங்கள் உங்கள் தொழிலில் நம்பிக்கையாக வேலை செய்யும் ஆட்களுக்கு பதவியையும் பொறுப்பையும் கூட்டித்தர வேண்டும்.

அதற்கு ஈடாக ஊதியத்தையும் தர வேண்டும். மேலும் சில புரபொஃஷனல் வேலைகளுக்கு (ஆடிட்டர், வக்கீல், விற்பனை வரி போன்றவற்றிற்கு) அந்தந்த துறையில் உள்ள புரபொஃஷனல்களை நாடுவது சிறந்தது. தாமாகவே எல்லா வேலைகளையும் செய்ய நினைத்தால் தொழிலை பெரிதாக்குவது மிகவும் சிரமம். மேலும் தொழில் முழுவதும் உங்களையே நம்பி இருக்கும். தொழிலுக்கு அது ஒரு பெரிய ரிஸ்க்காகிவிடும்.

தரம்

சிறிய தொழில்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை தரத்தை பாதுகாப்பது. நாம் இங்கு தரம் என்று குறிப்பிடுவது தொழிலில் உள்ள எல்லா அங்கங்களையும் குறிக்கும். உதாரணத்திற்கு உங்களின் வேலை நேரம் காலை 8 முதல் மாலை 8 வரை என்றால், அந்த 12 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர் எப்பொழுது வந்தாலும் உங்கள் அலுவலகம் அல்லது கடை திறந்திருக்க வேண்டும். அவ்வாறு ஒரு வேலை எதிர்பாராத விதமாக முடியாமல் போனால் அதை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

தொலைபேசி எண்ணை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தீர்கள் என்றால், அந்த எண்ணில் வேலை நேரத்தில் கூப்பிடும் பொழுது யாராவது ஒருவர் கட்டாயமாக பதில் செய்ய வேண்டும். அதுபோல் நீங்கள் இணையதளம் வைத்துள்ளீர்கள் என்றால், அந்த இணையதளம் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக வேலைசெய்ய வேண்டும். இல்லையென்றால் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நீங்கள் விற்கும் பொருளும் சரி, கொடுக்கும் சேவையும் சரி சொன்ன தரத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

மார்க்கெட்டிங்

நாம் முன் அத்தியாயங்களில் கண்டது போல ஆரம்ப காலத்திலேயே புதிய தொழில் ஆரம்பிப்பவர்கள் பெருவாரியாக விளம்பரத்தில் செலவழித்து விடுவார்கள் அல்லது விளம்பரமே செய்யாமல் இருப்பார்கள். இவை இரண்டுமே தவறு. விளம்பரம் என்பது மிக அவசியம். அது உரிய நேரத்தில் உரிய அளவில் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதை பல விதங்களில் செய்யலாம் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

இதுபோல் சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டு தொழில் செய்யும் பொழுது, தொழிலில் வெற்றி பெறுவது 100% உறுதி. கடந்த 20 வாரங்களாக ஸ்டார்ட்-அப் குறித்த எனது அனுபவத்தையும் எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் தொழில் முயற்சியில் 100% வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்!

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x