Published : 07 Oct 2017 03:00 PM
Last Updated : 07 Oct 2017 03:00 PM
`பாடத்த கவனிக்காம அங்க எங்கடா பராக்கு பார்த்துட்டிருக்கே’ என்ற ஆசிரியர் குரல் கேட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதை நிறுத்திய நாம், இன்று ஆபீஸ் மீட்டிங்கில் பேசும்போது ஊழியர்கள் கவனிக்காமல் பராக்கு பார்த்தால் கோபம் வருகிறது.
வீட்டில் டிவி பார்க்கும்போது விளம்பர ப்ரேக்கில் டிவியை மறந்து குடும்பத்தாருடன் பேசும் நாம், நம் பிராண்டை டிவியில் விளம்பரம் செய்யும்போது அதை பார்க்காமல் மக்கள் வேறு எங்கோ கவனம் செலுத்தினால் ஆத்திரம் வருகிறது. தெரியாமல் கேட்கிறேன், நமக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதை விடுங்கள். மற்றவர் கவனத்தை ஈர்த்து நாம் சொல்வதை, செய்வதை ஆர்வத்துடன் அவர்களை எப்படி கேட்க வைப்பது என்பதைப் பற்றி பேசுவோமா? உங்களுக்கு ஒரு வேளை இதை படிக்கும் ஆர்வம் இருந்தால்!
பல காலமாக உளவியலாளர்கள் ஆய்வு செய்து வரும் டாபிக் இது. மக்கள் கவனத்தை ஈர்ப்பது எப்படி? அவர்கள் ஆர்வத்தை தக்கவைப்பது எப்படி? தகவல் பரிமாற்றத்தின் முதல் வேலை கேட்பவர் கவனத்தை பெறுவது. அதன் முதல் பிரச்சினையும் இதுவே.
ஒருவர் கவனத்தை கவர்வதற்கு அடிப்படையான விஷயம் பேட்டர்னை உடைப்பது தான். கன்சிஸ்டெண்ட்டான பேட்டர்ன் இருந்து தொலைத்தால் போதும், மனித மனம் பட்டென்று ஆஃப் ஆகி அதை மறக்கிறது. `இந்த வீட்டுல ஒன்னு வச்சா வெச்ச எடுத்துல இருக்கறதில்ல’ என்று நாம் அலறுவது இதனால் தான். ஒரு பொருளை ஒரே இடத்தில் மட்டுமே பார்த்து பழகிவிட்டு அப்பொருள் அங்கில்லை என்றால் பட்டென்று கவனத்தை ஈர்க்கிறது.
நாம் சொல்ல வரும் விஷயத்தை எதிர்பாராத ஒன்றாக மாற்றிப் பாருங்கள். கேட்பவர் கவனம் உங்கள் பக்கம் பட்டென்று திரும்பும். ஆபீசில் நுழையும் போது ‘குட் மார்னிங்’ என்று கூறாமல் சக ஊழியரிடம் ‘குட் நைட்’ என்று கூறிப் பாருங்கள், அவர் கவனத்தை ஈர்க்கிறீர்களா இல்லையா என்று தெரியும்! ஆச்சரியம் என்றுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. அதற்கான விடையை அறிய ஆவல் பிறக்கிறது. எதிர்பாராத விஷயம் கவன ஈர்ப்பு தீர்மானமாகிறது! அப்படியென்றால் எதிர்பாராததை திட்டமிட்டு செய்வது சாத்தியமா? வெஜிடேரியன் கோழி கறி போல் இருக்கிறதே என்று தோன்றுகிறதா? ஆர்வம் என்பது விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேடும் அறிவுசார் தேவை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தூண்டும் திரைக்கதைகள் நம்மை படத்தோடு கட்டிப் போடுவது போல.
வண்டியில் செல்கிறீர்கள். அருகிலுள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பவுலர் கரெக்ட்டாய் பந்து வீசும் போது வண்டி கிரவுண்டை கடக்கிறது. கழுத்தை ஒடித்து திருப்பி என்ன நடந்தது என்று பார்க்கிறீர்கள், ஏன்? எப்படி போடப்பட்ட பந்து, அதை பேட்ஸ்மேன் எப்படி அடித்தார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் தானே!
சூழ்நிலையின் எந்த தன்மை ஆர்வத்தைத் தூண்டுகிறது? சூழ்நிலை ஆர்வத்தை பற்றி பல ஆய்வுகள் செய்தவர் ‘கார்னெகி மெலென் பல்கலைக்கழக’ Behavioural Economics துறை பேராசிரியரான ‘ஜார்ஜ் லொவென்ஸ்டீன்’. நம் அறிவில் முழுமை குறைந்து அதில் இடைவெளியை உணரும் போது நமக்குள் ஆர்வம் அதிகரிக்கிறது என்கிறார். தன் ஆய்வு முடிவுகளை `Psychological Bulletin’ என்ற ஜர்னலில் `The Psychology of Curiosity’ என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதினார்.
ஒன்றை பற்றி தெரிந்துகொள்ள நினைத்து அது முடியாமல் போகும் போது ஒருவித வெறுப்பு உருவாவது உடம்பில் அரிப்பு ஏற்பட்டு அதை சொரிய முடியாமல் போகும் சங்கடம் போன்றது. அக்கடுப்பை போக்க, அரிப்பை சொரிய நமக்கு அறிவில் ஏற்படும் இடைவெளியை நிரப்பும் ஆர்வம் பெருகுகிறது. நமக்கு தெரிந்த ஒரு விஷயத்திற்கும் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயத்திற்கும் உள்ள இடைவெளி ஆர்வத்தை தூண்டுகிறது என்கிறார் ஜார்ஜ். புதியதை தேடிப் பிடித்து, படித்து, மேலும் முன்னேற வைக்கும் ஊக்க சக்திதான் ஆர்வம் என்கிறார்.
நம்மிடத்திலும் மற்றவரிடத்திலும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி? Nuclear Physics பற்றி ஒரு எழவும் தெரியாத போது அதைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதன் மீது ஆர்வம் வராது. ஆனால் அதைப் பற்றி உங்களை பாதிக்கும் வகையில் ஒரு சில விஷயங்களை கூறிப் பாருங்கள். அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் கொள்ள வைக்க முடியும். உதாரணத்திற்கு சென்னையில் உள்ளவரிடம் கல்பாக்கம் அணு ஆலை பற்றியும், அங்கு தப்பித் தவறி விபத்து ஏற்பட்டால் சென்னை நகரம் வரை விரியும் ஆபத்தைப் பற்றி பேசிப் பாருங்கள். இப்பொழுது அவருக்கு உயிர் பயம் வந்து Nuclear Physics பற்றி கொஞ்சமேனும் தெரிந்துகொள்ள ஆர்வம் பெருகுவதை பார்ப்பீர்கள். ஒரு விஷயம் பற்றி தெரிந்துகொள்ளும் போது அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரிக்கிறது என்கிறார் ஜார்ஜ். கம்பெனியில் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்களை சேர்த்து ஒரு டீமாய் உருவாக்கி ஒரு பணியை தருவது இதனால் தான். பணியை செய்து முடிக்க முழுமையான அறிவு இல்லாத போது அதை அறிந்திருக்கும் மற்ற துறையை சேர்ந்தவர்களின் உதவியை நாடவேண்டிய நிலை. இருக்கும் அறிவை இன்னமும் பெருக்க ஆர்வம் மிகுந்து மற்றவர் உதவியை நாட வைக்கிறது. திட்டமிட்ட பணி திறமையாய் முடிகிறது.
அடிப்படை அறிவு இல்லாத போது?
நம் அறிவில் உள்ள இடைவெளியிலிருந்து பிறக்கிறது ஆர்வம், சரி. ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லாத போது அதன் மீது ஆர்வத்தை எப்படி உருவாக்குவது? ஆர்வம் வராத அந்நேரங்களில் ஆர்வத்தை வற்புறுத்தி வரவழைக்க முடியுமா? பேஷாக முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த ‘தமிழ்நாடு ப்ரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டியை `ஸ்டார் டிவி’ ஒளிபரப்பிய விதத்தை நினைத்துப் பாருங்கள். சென்னையில் உள்ளவருக்கு மதுரை வீரன்ஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியட்ஸ் அணியுடன் ஆடும் ஆட்டத்தைப் பற்றி பெரிய ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இல்லாத அணிகள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்க்க வைக்க முடியுமா? ஓரளவேனும் முடிந்திருக்கிறது.
போட்டி துவங்குவதற்கு முன் ஸ்டார் டிவி ஆடும் ஊர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதைப் பார்த்திருப்பீர்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்களான `மைக் ஹஸ்ஸி’ ‘மேத்யூ ஹேடன்’, ‘எல். சிவராமகிருஷ்ணன்’ போன்றோர் மதுரை தெருக்களில் இறங்கி அங்குள்ள மக்களை சந்திப்பது, அந்த ஊரின் ஸ்பெஷல் இடங்கள் பற்றிய விளக்கம், ஊரின் பிரத்யேகமான உணவுகளை சுவைத்து அதைப் பற்றி கமெண்ட், அந்த ஊர் கிரவுண்ட், குழுமியிருக்கும் ரசிகர்களிடம் பேட்டி என்று ஒளிபரப்புவதை பார்த்திருப்பீர்கள். இவை எதற்கு? அந்த ஊரைப் பற்றி சிறிய தகவலை வெளியூர் ரசிகர்களுக்கு தருவதற்குதான். இதனால் வெளியூர்காரர்களுக்கு `சரி இந்த ஊர் எப்படி மாட்ச் ஆடுகிறார்கள் என்று பார்ப்போம்’ என்ற ஆசை தோன்றும். அந்த ஆசையே ஆர்வமாய் மாறி அந்த ஊர் மேட்சுகளை தவறாமல் பார்க்கவும் தங்களுக்கு பிடித்த ஊர்களின் அணிகளின் ரசிகராக மாற்றவும் வைக்கிறது!
ஒருவர் கவனத்தை கவர்ந்து உங்கள் மீது, நீங்கள் சொல்ல வருவதை கவனிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த சிறந்த வழி அவரை சின்ன மீன் கொண்ட கொக்கி போட்டு இழுப்பது தான். ‘இதோ உங்களுக்கு தெரிய ஒரு சிறிய செய்தி. இதோ இதைப் பற்றி நீங்கள் அறியாத மற்ற செய்திகள்’ என்று அணுகும் போது ஆர்வம் தானாய் பிறக்கிறது. கவனச் சிதறலையும் தடுக்கிறது. ஆர்வ இடைவெளியை பயன்படுத்தி உங்கள் ஊழியர்கள் கவனத்தை ஈர்க்கும் விதங்களும், உங்கள் விளம்பரங்களை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும் வழிகளும் கூட சாத்தியம் என்பதை நான் தனியாய் விளக்கவேண்டுமா, என்ன. அதை நீங்களே சிந்தித்து பார்த்து திறம்பட பிரயோகிக்கும் ஆர்வம் கூட இல்லையா!
தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT