Published : 17 Jun 2023 09:57 PM
Last Updated : 17 Jun 2023 09:57 PM

கேரளா, குடகு பகுதிகளில் அறுவடை முடிவதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடும் உயர்வு

தருமபுரி: கேரளா, குடகு பகுதிகளில் இஞ்சி அறுவடை முடிவை எட்டியிருப்பதால் தமிழகத்தில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சைவ, அசைவ உணவுகள் தயாரிப்பில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதேபோல, தேநீர் கடைகளில் தினந்தோறும் விற்பனையாகும் சமோசா, பப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிப்பிலும் இஞ்சி முக்கிய இடம் பெறுகிறது. மேலும், சில கடைகளில் இஞ்சி டீ தயாரிப்பின்போதும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளில் இயந்திரத்தில் கரும்பை அரைத்து சாறு பிழியும்போது கரும்புடன் எலுமிச்சை, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்தே அரைத்து சாறெடுக்கின்றனர். கரும்புச் சாறின் சுவையை மேலும் கூட்டும் வகையில் இவ்வாறு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் அன்றாட உணவு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பின்போதும், உணவு சார்ந்த வர்த்தக மையங்களிலும் அதிக அளவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இஞ்சியின் விலை கடந்த சில வாரங்களாக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சியின் விலை ரூ.100 என்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து படிப்படியாக விலை உயர்வு ஏற்பட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் 1 கிலோ இஞ்சி ரூ.200 என்ற விலையை எட்டியது.

அதன்பிறகும் இஞ்சி விலை சீராக உயர்ந்து வருகிறது. இன்று(17-ம் தேதி) தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் 1 கிலோ இஞ்சி ரூ.218-க்கு விற்பனையானது. உழவர் சந்தையின் விலையை விட தனியார் காய்கறிக் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 வரை விலை கூடுதலாகவே இருக்கும். இஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அறுவடை முடிவை எட்டியிருப்பதால் இவ்வாறு விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறியது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கேரளாவில் இருந்தும், கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் இருந்தும் தான் இஞ்சி சப்ளை ஆகிறது. குடகு பகுதியில் விளையும் இஞ்சி பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் வந்து சேர்கிறது. இஞ்சியாக பயன்படுத்த 6 மாதத்தில் அறுவடை செய்து விடுவார்கள். சுக்கு தயாரிக்கும் தேவைக்கு பயன்படுத்த இஞ்சியை நடவு செய்ததில் இருந்து 8 மாதங்கள் கழித்தே அறுவடை செய்வார்கள்.

கேரளா, குடகு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சியின் அறுவடை தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. எனவே, கடந்த சில வாரங்களாக இஞ்சியின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகளுடன் 10 ரூபாய்க்கு இஞ்சி கேட்டு வாங்கிச் செல்வர். தற்போது ரூ.10-க்கு இஞ்சி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இஞ்சி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 கிராம் இஞ்சியே ரூ.22 என்ற நிலையை எட்டி விட்டது. இன்னும் ஓரிரு மாதத்துக்கு இஞ்சி விலை உச்சத்தில் தான் இருக்கும். அதன் பிறகு மீண்டும் இஞ்சி அறுவடை தொடங்கி, அதன் வரத்து அதிகமாகும்போது விலை படிப்படியாகக் குறையத் தொடங்கும்" இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x