Published : 15 Jun 2023 12:17 PM
Last Updated : 15 Jun 2023 12:17 PM
சென்னை: மலிவான கட்டணத்தில் பிரைம் சந்தா திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேசான் நிறுவனம். ‘அமேசான் பிரைம் லைட்’ என இந்தத் திட்டம் அறியப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்து மொபைல் பயனர்களுக்குமான பிரைம் மொபைல் எடிஷனை அமேசான் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பிரைம் லைட் திட்டம் சார்ந்த சோதனையை சில பயனர்களுக்கு பிரத்யேகமாக வழங்கி சோதனை மேற்கொண்டது அமேசான். இந்நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பிரைம் சந்தாவுடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட சில வரம்புகளுடன் பிரைம் வீடியோவின் முழு கன்டென்ட்டையும் பயனர்கள் இதில் அக்செஸ் செய்யலாம் எனத் தெரிகிறது.
இருந்தாலும் இதில் அமேசான் மியூசிக், அமேசான் கேமிங், பிரைம் ரீடிங் போன்ற சேவையை பயனர்கள் பெற முடியாது. அதேபோல பிரைம் லைட் சேவையை அதிகபட்சம் இரண்டு சாதனங்களில் மட்டுமே பயனர்களால் பெற முடியும். வீடியோ கன்டென்ட் அனைத்தும் ஹெச்டி தரத்தில் மட்டுமே கிடைக்கும். அதோடு வீடியோவுக்கு இடையில் விளம்பரங்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் நேரம் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.
ஆண்டுக்கு ரூ.999 சந்தாவாக செலுத்தி பயனர்கள் பிரைம் லைட் சேவையை பெற முடியும். அமேசான் பிரைமின் சந்தா ஆண்டுக்கு ரூ.1,499 என உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மலிவு விலை திட்டத்தின் மூலம் சந்தாதாரர்களை ஈர்க்க முடியும் என அமேசான் நம்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT