Published : 11 Jun 2023 10:38 AM
Last Updated : 11 Jun 2023 10:38 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு நிறுவனம், நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக காளான் வளர்ப்பு மூலம் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதன்படி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசிய காளான் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சுதீர்குமார் அன்னேபு, உதகையில் உள்ள மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் தலைவரும், விஞ்ஞானியுமான சுந்தராம்பாள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து நீலகிரி மாவட்டத்தில் உண்ணக் கூடிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட காளான்களை பயிரிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சுந்தராம்பாள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தனியார் நிறுவன உதவியுடன் கடந்த ஆண்டு காளான் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. உதகை அருகேயுள்ள தொட்டன்னி கிராமத்தைச் சேர்ந்த சிலர், காளானை வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது உதகை மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், பிரதான் மந்திரி க்ரிஷி சஞ்சய் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் விவசாயிகளை மையமாகக் கொண்டு, தொடக்க தொழிலாக காளான் வளர்ப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காய்கறி பயிர்களை பயிரிடுவதற்கு போதுமான தொழு உரம் கிடைக்காமல், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
காளான் பயிர் அறுவடைக்குப் பின்னர் உற்பத்தியாகும் கழிவுகளை தொழு உரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் சூழல் உயிர் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். விவசாயிகள் மட்டத்தில் காளான் வளர்ப்பை முதன்மை விவசாயத்துடன் ஒருங்கிணைத்தால் காய்கறி சாகுபடியில் இடுபொருட்கள் செலவை குறைக்க முடியும்.
விவசாயிகள் காளான் வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபடலாம். உதகையில் உள்ள மையத்தில் காளான் வளர்ப்பு மற்றும் மண்வள பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT