Published : 10 Jun 2023 05:20 PM
Last Updated : 10 Jun 2023 05:20 PM
கொல்கத்தா: 2022-23 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பு மகிழ்ச்சி அளிக்கும் சாதனை என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாரத் வர்த்தக சபை சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆனந்த் நாகேஸ்வரன், "2022-23-ல் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யின் முதல் நம்பகமான மதிப்பீடு. இத்தகைய வளர்ச்சி அரசாங்கத்துக்கும் பொருளாதாரத்துக்கும் மகிழ்ச்சியளிக்கும் சாதனை. எனது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை என்னவென்றால், 2022-23-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் இறுதி செய்யும்போது, அது 7.2 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.
2021-22-ன் ஜிடிபி 9.1% ஆக மதிப்பிடப்பட்டது. 2022-23-ன் ஜிடிபி 7.2% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு அரசாங்கத்தைவிட, உங்களைப் போன்றவர்களின் (தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள்) முயற்சி அதிகம். நாட்டின் பொருளாதாரம், சில வெளிப்புற ஆபத்து காரணிகளை சமாளிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது. ஏனெனில், குறைந்த விலையில் எண்ணெய் வாங்குகிறோம்; அதோடு, ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதாரமும் ஸ்திரத்தன்மையாக இருக்கிறது. இதனால் நாடு பயனடைந்து வருகிறது" என தெரிவித்தார்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் 2022-23க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்பதும், தனியார் நுகர்வு மற்றும் தனியார் முதலீடு காரணமாக 2023-24ல் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT