Published : 08 Jun 2023 07:39 PM
Last Updated : 08 Jun 2023 07:39 PM
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ ‘Recycling Kachra’ என்ற தலைப்பில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்ததாகக் கூறி சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வீடியோவை அந்நிறுவனம் நீக்கி விளக்கமளித்துள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை முன்னிலைப்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த வீடியோ ஜொமோட்டோ நிறுவனத்திற்கே பின்னடைவாகிவிட்டது.
வீடியோவில் என்ன சிக்கல்? - கடந்த 2001-ம் ஆண்டு ஆமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியான ‘லகான்’ திரைப்படத்தில் ‘கச்ரா’ (Kachra) என்ற கதாபாத்திரத்தில் பட்டியலினத்தவராக நடித்திருந்தார் ஆதித்ய லக்கியா. இந்தக் கதாபாத்திரத்தை மீட்டூருவாக்கம் செய்து தனது வீடியோவில் பயன்படுத்திகொண்ட ஜொமோட்டோ அவரை குப்பையாக சித்தரித்திருந்தது. (கச்ரா என்றால் இந்தியில் குப்பை).
ஜொமோட்டோவின் வீடியோவில் கச்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதித்ய லக்கியா மனித மேஜையாகவும், கை துண்டு, விளக்கு, பூந்தொட்டி, காகிதம் போல சித்தரிக்கப்பட்டு, அதில், இத்தனை கிலோ குப்பைகளால் இந்த பொருட்களெல்லாம் உருவாகியிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகமாக காட்டபட்ட கதாபாத்திரத்தை குப்பை போல சித்தரித்ததற்கு எதிர்ப்பு எழுந்தது.
ட்விட்டரில் ‘பாய்காட் ஜொமோட்டோ’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை நீக்கியுள்ள ஜொமோட்டோ நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், “உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, பிளாஸ்டிக் கழிவுகளின் சாத்தியக் கூறுகள் மற்றும் மறுசுழற்சியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை நகைச்சுவையான முறையில் பரப்புவதே எங்கள் நோக்கம். அதற்காகத்தான் அந்த வீடியோ உருவாக்கப்பட்டது. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. தற்செயலாக, சில சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் உணர்வுகளை நாங்கள் புண்படுத்தியிருக்கலாம். ஆகவே, அந்த வீடியோவை நாங்கள் நீக்கிவிட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On world environment day, our intent was to spread awareness about the potential of plastic waste and benefits of recycling in a humorous way.
Unintentionally, we may have hurt the sentiments of certain communities and individuals. We have taken down the video.— zomato (@zomato) June 8, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT