Published : 08 Jun 2023 01:01 PM
Last Updated : 08 Jun 2023 01:01 PM
புதுடெல்லி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாததால், எஸ்டிஎஃப் (ஸ்டான்டிங் டெபாசிட் ஃபேசிலிடி) விகிதம் 6.25 ஆகவும், மார்ஜினல் ஸ்டான்டிங் ஃபேடிலிடி மற்றும் வங்கி விகிதம் 6.75 ஆகவும் தொடரும்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்,"இந்தியாவில், கடந்த நிதியாண்டை விட, 2023 மார்ச் - ஏப்ரல் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்தது. இருந்த போதிலும் மொத்த பணவீக்கம் அதன் இலக்கை விட அதிகமாகவே இருக்கிறது. எங்களின் கணிப்புப்படி, அது அப்படியே இருக்கும் மற்றும் 2023 - 24 நிதியாண்டில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தொடரும்.
பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது மற்றும் முந்தைய கணிப்புகளை எல்லாம் தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2022-23 ஆண்டில் 7.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 7 சதவீதத்தை விட வலுவாக உள்ளது. தொற்றுக்கு முந்தைய அளவை விட 10.1 சதவீதம் தாண்டியிருக்கிறது. இந்த அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டு 2023-24 ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கம், புவி அரசியல் பதற்றம், இறுக்கமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் காரணமாக உலகப் பொருளாதார நடவடிக்கைகள் குறையும் என்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்கிறது.
வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில் பணவீக்க விகிதத்தை இலக்குடன் சமன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது என்று நிதிக் கொள்கை கமிட்டியின் 6 உறுப்பினர்களில், ஐந்து பேரால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT