Published : 07 Jun 2023 06:43 AM
Last Updated : 07 Jun 2023 06:43 AM

வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது என்று மத்திய வருமான வரித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஊடக சேவை வழங்கி வருகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டது.

2002 குஜராத் கலவரம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் உட்பட முஸ்லீம்களுக்கு எதிராக பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அந்த ஆவணப்படத்தில் பிபிசி பதிவு செய்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து, இந்தப் ஆவணப்படம் வெளியான சில நாட்களில், பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. பிபிசி ஊழியர்களிடம் 60 மணிநேரம் வருமான வரித் துறை அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர்.

இந்தியாவில் பிபிசி ஈட்டும் வருவாய்க்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்று புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக இந்தச் சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

“பிபிசியின் வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த அதன் பிற இந்திய மொழி வருவாய் விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. பிபிசி அதன் வருவாய் கணக்கிட்டதில் விதிகளைப் பின்பற்றவில்லை என்று தெரிகிறது” என்று வருமானத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

மோடி குறித்து ஆவணப்படம் வெளியானதையொட்டி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனையை ஏவியுள்ளதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.

இந்நிலையில் தற்போது பிபிசி வரியை குறைத்துச் செலுத்தியது உறுதியாகி இருக்கிறது. இது குறித்து மத்திய வருமான வரித் துறை வட்டாரம் கூறுகையில் “வரியை குறைத்து செலுத்தியதை தற்போது பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இன்னும் மீதம் செலுத்த வேண்டிய வரித் தொகையை பிபிசி செலுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளது.

பிபிசி அதன் வருவாயை கணக்கிட்டதில் விதிகளைப் பின்பற்றவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x