Published : 01 Feb 2022 10:59 AM
Last Updated : 01 Feb 2022 10:59 AM
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"தமிழகத்தில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது!
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது!
பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்!"
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT