கோவை ஆட்சியர் சமீரனுக்கு கரோனா உறுதி: உடன் பணியாற்றிவர்கள் தனிமைப்படுத்த அறிவுரை

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்
Updated on
1 min read

கோவை: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், உடன் பணியாற்றிய ஊழியர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியராக சமீரன் பணியாற்றி வருகிறார். மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் கடந்த சில மாதங்களாக அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று, கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார்.

அதோடு, ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி பணிகளை தீவிரப்படுத்தி வந்தார்.

இந்தச் சூழலில், ஆட்சியர் சமீரனுக்கு கடந்த இரு தினங்களாக லேசான, சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆட்சியர் சமீரன், கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு இன்று (ஜன.28) வெளியானது. இதில் ஆட்சியர் சமீரனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆட்சியருடன் அலுவலக தொடர்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆட்சியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் குணமடைந்து மீண்டும் பணிக்கு வரும் வரை, ஆட்சியர் பொறுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் கவனித்துக் கொள்வார் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in