Published : 28 Jan 2022 10:45 AM
Last Updated : 28 Jan 2022 10:45 AM
சென்னை: தமிழகத்திற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 26ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இடையில் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி, ஜனவரி 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம். மாநில தேர்தல் அதிகாரிகளால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும்,
எவ்வித கால அவகாசமும் வழங்காமல், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதில் இருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதுவரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தை போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும்."
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT