Published : 25 Jan 2022 02:30 PM
Last Updated : 25 Jan 2022 02:30 PM
சென்னை : தஞ்சையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் சிலையை அப்புறப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு விஷமிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல், தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது போன்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இது போன்று சட்டம் ஒழுங்கை பாதிக்கின்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலையடையச் செய்கிறது. தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்ஜிஆர், தனது தன்னலமற்ற செயல்களால், எண்ணற்ற ஏழை-எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாக, இன்றைக்கும் அனைவருடைய உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத தலைவர்.
இது போன்ற விரும்பத்தகாத செயல்களை செய்து எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களான கோடான கோடி உடன் பிறப்புகளின் மனதை காயப்படுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
எம்ஜிஆரின் சிலையை அப்புறப்படுத்திய விஷமிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதுடன், தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT